கர்நாடக தேர்தல் 2023: கர்நாடகாவில் காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் ஹூப்பள்ளி-தர்வாட் மத்திய தொகுதியில், அவரது சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வ வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கர்நாடக மாநில பாஜக, 'ஆபரேஷன் தாமரை' என்ற திட்டத்தை மேற்கொண்டு வருவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
'ஆபரேஷன் தாமரை' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஹுப்பள்ளி-தர்வாட்டின் முன்னாள் மேயர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரகாஷ் கியரகட்டி ஆகியோர் பாஜகவிற்கு இழுக்கப்பட்டனர்.
சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த ஷெட்டரின் மூக்கை உடைக்கும் விதமாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் முன்னாள் முதல்வரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று வேலை செய்து வருகிறார். ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த ஹூப்பள்ளி-தர்வாட் சிட்டி கார்ப்பரேஷனின் கட்சி உறுப்பினர்களை பாஜகவில் தக்கவைத்துக்கொள்வதில் பிரகலாத் ஜோஷி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூப்பள்ளி-தார்வாட்டில் காங்கிரஸ் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக இழுத்து, ஷெட்டரின் தொகுதியில் அவரின் செல்வாக்கை மட்டுப்படுத்துமாறு கட்சி அழுத்தம் கொடுக்கிறது. தற்போது வட கர்நாடகா பகுதியில் ஷெட்டர் பிரச்சாரம் செய்து வருகிறார். லிங்காயத் தலைமையை பாஜக அவமானப்படுத்துவதாகவும், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு டிக்கெட் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
ஒரு காலத்தில் ஷெட்டரின் வலது கையாக இருந்த மகேஷ் தெங்கினகாயை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக. 10 நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட கட்சியின் ஒன்பது மத்திய தலைவர்கள் ஹுப்பள்ளி நகருக்கு வந்து, முன்னாள் முதல்வரின் தோல்வியை உறுதி செய்ய தொடர் கூட்டங்களை நடத்தினார்கள். முன்னாள் முதல்வர் பி.எஸ். ஷெட்டரை தோற்கடிக்க ரத்தத்தில் எழுதி தருவதாக கூறும் அளவிற்கு சென்றார் எடியூரப்பா.
இது பாஜகவின் சிம்மாசனத்தை கைப்பற்றும் முயற்சிகள் என்றால், அந்த இலக்கை அடையவிடாமல் தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும் சோடை போகவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் அமித் ஷா மீது காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் புகார் அளித்தனர்.
ஜாதி, மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை பரப்பி, கர்நாடக மாநிலத்தின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமித் ஷா மீதான புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அவர் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுளது.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்கள் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பாஜக பிரச்சாரத்தின் போது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிஎப்ஐ மீதான தடை வாபஸ் பெறப்படும் என ஆதாரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், அவர்கள் வெறுப்பை பரப்பவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும், சட்டவிரோத தேர்தல் நடத்தவும் முயற்சிக்கின்றனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. 2013 முதல் 2018 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வகுப்புவாத கலவரத்தை அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் PFI அமைப்பு மீதான தடையை கோரியது, ஆனால் தடையை திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கவில்லை என்று கூறும் காங்கிரஸ், தோல்வி பயத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாஜக, அமித் ஷா, ஜேபி நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, 153, 153A, 171G, 505, 120B, 123 ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் மீது பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிசி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.
மேலும், இது தொடர்பாக மத்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், தலைமை தேர்தல் அதிகாரி எனக்கு கடிதம் எழுதியுள்ளார், நாளை மாலை 4 மணிக்கு இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார். இது நடத்தை விதிகளை மீறிய வழக்கு என்பதால், அமித் ஷாவை மாநில தேர்தல் பணியில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.
மேலும் படிக்க | Karnataka Election 2023: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும்! அமித் ஷா சொல்வதை மறுக்கும் கால பைரவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ