பட்ஜெட் 2019: வருமானம் வரி குறித்து நிதியமைச்சர் கூறிய விவரங்கள்!!

வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தால் 2% வரி வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 5, 2019, 01:14 PM IST
பட்ஜெட் 2019: வருமானம் வரி குறித்து நிதியமைச்சர் கூறிய விவரங்கள்!!
File photo

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது வருமான வரிகுறித்து பேசிய போது, வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்ததை, பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டன. இதனால் வருமான வரி உச்சவரம்பு மற்றும் வருமான வரி சட்டம் பிரிவு 80C-ன் கீழ் அளிக்கப்படுகிற வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்தநிலையில், மக்களவையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது, முதலில் வரி செலுத்தும் நாட்டின் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் வரி விகிதங்கள் அறிவிக்கப்படும். நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக நேரடி வரி வருவாய் அதிகரித்து வருவதால், சுமார் 78 விழுக்காடு அளவிற்கு நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

ரூ.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. 400 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். மின்சார வாகன கடனுக்கான வட்டியில் வரி விலக்கு அளிக்கப்படும். 

ஒரு வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தால் 2% டி.டி.எஸ் வசூலிக்கப்படும். ஆதார் அட்டைகளை வைத்திருப்பதால் ஆதார் எண்ணை அளித்து வரி கட்டலாம். ஆதார் இருக்க வேண்டிய இடத்தில் இனி நீங்கள் பான் கார்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய்க்கான வரி குறைப்பு. 15 ஆண்டுகளில் வீட்டுக்கடனுக்காக ரூ. 7 லட்சம் வரை மிச்சமாகலாம்.