சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது சிலர் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கோஷம் போட்டது வருத்தம் அளிக்கிறது.
தேசிய கொடியை அவமதித்தவர்கள், பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடையை நீக்க 2016 ஜனவரியில் மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இந்த நேரத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பாணை கொண்டு வந்தால் கோர்ட் அவமதிப்பாகும் என்பதால் தான் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரவில்லை. எனினும், தமிழக அரசு கொண்டு வரலாம் என்று அப்போதே சொன்னோம். அது தான் இப்போது நடந்துள்ளது.
தேசத்திற்கு எதிராக கோஷமிட்டவர்கள் தேசவிரோதிகள்தான். போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊட்டுருவியது.பிரதமருக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை தேவை. பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்புவது தேசவிரோதமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணவே தமிழக அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது.
ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக, கோர்ட்டில் வாதாடுபவர்கள் காங்கிரசார் தான். ஆனால், அவர்கள் தனிநபர் என்ற நிலையில் செயல்படுவதாக கூறுகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.