எகிப்து, துருக்கி, ஈரான் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!
வெங்காய விநியோகத்தின் கடுமையான பற்றாக்குறை மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், துருக்கி, எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து ஆய்வு செய்ய செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டுள்ளது. நுகவோர் கூட்டத்திற்குப் பிறகு, நுகர்வோர் விவகார அமைச்சகம், வெங்காய இறக்குமதியை எளிதாக்குவதற்கு அரசாங்கம் செயல்படும் என்றும் மற்ற நாடுகளிலிருந்து விரைவான விநியோகத்தை உறுதி செய்வதற்கான செயல்முறையை எளிதாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மழை உள்ளிட்ட காரணிகளால், வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்திருக்கிறது. இதனை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் சிலர், வெங்காயத்தை பதுக்கி வைத்து, அதன் விலையை உயர்த்திவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விற்பனை விலை, ஒரு கிலோ 100 ரூபாய் வரையில் உயர்ந்திருக்கிறது. இதையடுத்து, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த வகையில், அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, எகிப்து, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து, வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அமைச்சக அளவில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவாக வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்படும் என மத்திய அரசின், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரானில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விரைவில் 80 முதல் 100 வெங்காய கன்டெய்னர்களில், இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் பிற தென் மாநிலங்களிலிருந்து வெங்காயத்தை வட இந்தியாவுக்கு சப்ளை செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், நாட்டின் சில மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காய பயிர்கள் நாசமடைந்துள்ளன.
அதனால்தான் வெங்காய சப்ளை குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி, பெல்லாரியிலிருந்து வெங்காய வரத்து அதிகரித்தால், விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாநில தலைநகர், பெங்களூரை பொருத்தளவில், இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-ஐ எட்டியுள்ளது. பெரிய வெங்காயம், ரூ.50 முதல் ரூ.60 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.