இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!

இந்தியா சீன எல்லை பதற்றங்களால் ஏற்பட்ட விளைவு சீனாவின் ஆதிக்க கனவுகளை தகர்த்துள்ளது

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 12, 2020, 06:00 PM IST
இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!

இந்தியா மற்றும் சீனா இடையில் கல்வான் (Galwan) பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதல்கள் மற்றும் பதற்றத்தினால் சீனாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 59 சீன செயலிகளை தடை செய்யும் புதுடெல்லியில் முடிவு மிக தெளிவாக ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

மிகவும் பிரபலமான, இந்தியாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட வீடியோவை பகிரும் செயலியான டிக்டாக் (TikTok) மீதான தடை நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவே முடியாது.  இதை மிக முக்கிய நடவடிக்கையாகவே சீனாவும் பிற நாடுகளும் பார்த்தன.

ALSO READ | பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்

தொழில்நுட்ப ரீதியாக உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற சீனாவின் கனவிற்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்பதை மறுக்க முடியாது. இந்திய சந்தையில் பாதிப்பு ஏற்பட்டால், சீனா நிச்சயமாக உலக அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று பிரூகிங்ஸ் கழகத்தில் உள்ள சீனாவின் உத்திகள் குறித்து ஆராயும் நிபுணரான ருஷ் தோஷி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இந்தியாவால் இதை செய்ய முடிந்தது என்று எண்ணும் போது, உலக நாடுகள் இந்தியாவை பின்பற்றி நடக்கும் என்று ருஷ் தோஷி மேலும் கூறினார்.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக  கூறி டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தொடர்ந்து, சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' (Global Times) என்ற பத்திரிக்கை இந்த  தடையால் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டது. இதிலிருந்து சீனாவிற்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo), இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக் டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாக குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

ஆஸ்திரேலியாவும் சீன செயலிகள் மீதான தடை குறித்து யோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!

இதனால் சீனாவிற்கு ஏற்பட்ட பாதிப்பு, இந்தியா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அடியோடு நின்றுவிடவில்லை. உலக நாடுகளும் அதைப் பின்பற்றி நடந்தால், சீனாவிற்கு நிச்சயம் அது ஒரு பேரிடியாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் கருத்து சிறந்த உதாரணம்.

இப்போது தொழில்நுட்பத்தை தாண்டி, அனைத்து துறையிலும் சீனா செலுத்தும் ஆதிக்கத்தை உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு முயற்சிக்கு , மூன்று ஆண்டுகள் முன்னரே இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது உலக நாடுகள் இதை இந்தியாவின் கருத்தை ஆதரித்து, இந்த திட்டட்தை எதிர்க்கின்றன.

எது எப்படி என்றாலும், சீன செயலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடை, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் ஆதிக்க மனப்பான்மைக்கு ஏற்பட்ட பேரிடி என்று கூறலாம்.

சீனாவின் கனவு தவிடு பொடியாகி விட்டது என்று The Wall Street Journal என்ற பத்திரிகை  கூறியுள்ளது.