பெங்களூரு: E-Ticket-களுக்கான சட்டவிரோத மென்பொருளில் ஈடுபட்டிருந்த ஒரு அண்டை நாட்டு கிரிமினல் கும்பலின் சதி வேலைகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தென் மேற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்த கும்பலின் தலைவனும் 100 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நாச வேலை முறியடிக்கப்பட்டது.
2019 செப்டம்ரில், இந்தியா முழுவதும் தத்கால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC மற்றும் வங்கி பாதுகாப்பு முறைகளை பைபாஸ் செய்ய ஒரு சட்ட விரோத மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது என SWR ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பல சோதனைகளுக்குப் பிறகு, RPF ஒரு குற்றவாளியை கைது செய்தது. IRCTC தத்கால் முறை, வங்கி OTP ஆகியவற்றை தவிர்த்து, நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு மென்பொருளைப் பயன்படுத்தும் சட்டவிரோத மென்பொருள் வணிகத்தின் சூத்திரதாரி பற்றிய தகவல்களை அந்த குற்றவாளி வழங்கினான். அந்த மாஸ்டர்மைண்ட் இந்த பணிக்காக பயணிகளிடமிருந்து பெருந்தொகையைப் பெற்றான்.
இந்த வேளையில் அந்த சூத்திரதாரி பெங்களூருவில் இருந்து தப்பி ஓடிவிட்டான். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 2019 முதல் அவன் அதிகாரிகளிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தான்.
2020 ஜனவரியில் அவன் ஒரிசாவின் கேண்டர்பாராவில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவனை கைது செய்த RPF குழு அவனை கைது செய்து மேலதிக விசாரணைக்கு பெங்களூருக்கு அழைத்து வந்தது.
"விசாரணையின் போது, இஸ்ரோ, ரயில்வே மற்றும் பிற அரசு நிறுவனங்கள், 3000 வங்கி கணக்கு விவரங்கள், பிட்காயின்கள் மற்றும் பிற கிரிப்டோ நாணய இணைப்புகள் ஆகியவற்றிற்கான சாதனங்களை ஹேக்கிங் செய்வதற்கான உயர் மட்ட ஹேக்கிங் லினக்ஸ் அடிப்படையிலான அமைப்புகளின் பாக்கிஸ்தானிய அடிப்படையிலான மென்பொருள் அவனிடம் இருந்தது என்பது தெரிய வந்தது" என்று SWR அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையில், அவன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கட்டளையுடன் 25,000 ஹேக்கர்கள் உள்ளதையும் அவர்கள் மூலம் நடத்தப்படும் கறுப்புச் சந்தையைப் பற்றிய தகவல்கலையும் வெளிப்படுத்தினான். "இந்த சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பெறப்பட்ட கறுப்புப் பணம் நூற்றுக்கணக்கான கோடி ஆகும். இது நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தேச விரோத மற்றும் குற்றச் செயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும்: Piyush Goyal
இதன் விளைவாக, அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. உண்மையான பயணிகளால் IRCTC வலைத்தளம் மூலம் மின் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாமல் போனது. கும்பல் சக்திவாய்ந்த மென்பொருளைப் பயன்படுத்துவதால் டிக்கெட்டுகள் சில நொடிகளிலேயே காலியாகிவிடும் என்று SWR கூறியது.
RPF SWR மூலம் இந்தியா முழுவதும் செயல்பட்ட ஹேக்கர்கள் மற்றும் மோசடி பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த நபர்கள் அதி நவீன மென்பொருளை பயன்படுத்தி IRCTC மின்-டிக்கெட் மற்றும் வங்கி அமைப்புகளையும் ஒரு வகையில் முடக்கி தங்கள் செயல்களை செய்துள்ளனர்.
ரயில்வே வாரியத்தின் துணை ஆய்வாளர் ஜெனரலுடன் இணைந்து ஆர்.பி.எஃப் இயக்குநர் ஜெனரல், இந்தியா முழுவதும் பல்வேறு சோதனைகளுக்கு தலைமை தாங்கினார். பின்னர் 100 க்கும் மேற்பட்ட குழு உருவாக்குநர்கள் மற்றும் மென்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மென்பொருள் குறியீடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
அவர்களின் தொடர்ச்சியான பணிகளைக் கருத்தில் கொண்டு, அகில இந்திய சட்டவிரோத மென்பொருள் மோசடி மற்றும் அவற்றின் முறைமை ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காக முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் / எஸ்.டபிள்யூ.ஆர் மற்றும் பிரதேச பாதுகாப்பு ஆணையர் / பெங்களூர் மற்றும் குழுவுக்கு டி.ஜி / ஆர்.பி.எஃப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.