சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள், அவரை வணங்குவோம், அவர் வழி நடப்போம்!!

சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்தார். மிகவும் வேறுபட்ட மற்றும் முற்போக்கான சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்கிய விவேகானந்தர், தன்னுடைய தெளிவான வழிகாட்டுதல்களாலும், தன் எளிமையான வாழ்க்கை முறையாலும் பலரையும் கவர்ந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 09:44 AM IST
  • 1902 ஆம் ஆண்டு இதே நாளில்தான், மேற்கு வங்கத்தின் பேலூர் மடத்தில் தியான முத்திரையிலேயே அவர் இயற்கை எய்தினார்.
  • தன் பேச்சுத் திறனால், தான் சொல்ல விழையும் கருத்துகளை கேட்பவர் மனதில் ஆழமாக பதிய வைக்கும் திறன் படைத்தவர்.
  • இளைஞர்கள் அவரது போதனைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.
சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள், அவரை வணங்குவோம், அவர் வழி நடப்போம்!! title=

’பாரோர் பலருள் சீரோர் சிலரே, சீரோர் சிலருள் சீலர் இவரே’ என்ற வாக்கினிற்கேற்ப நமது நாட்டில் பிறந்து மனித குல மாணிக்கங்களாய் திகழ்ந்தவர்கள் பலர். அவர்களுக்குள் சுவாமி விவேகானந்தர் (Swamy Vivekananda) குறிப்பிடத்தக்கவர். 1902 ஆம் ஆண்டு இதே நாளில்தான், மேற்கு வங்கத்தின் (West Bengal) பேலூர் (Belur) மடத்தில் தியான முத்திரையிலேயே அவர் இயற்கை எய்தினார் (Death anniversary). இந்தியாவின் வேத புராணங்களின் மகிமை, கலாச்சாரத்தின் முக்கியத்துவம், இந்து மதத்தின் பெருமை ஆகியவற்றை உலகெங்கிலும் பரப்பியதில் விவேகானந்தருக்கு மகத்தான பங்குண்டு.

சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்தார். மிகவும் வேறுபட்ட மற்றும் முற்போக்கான சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்கிய விவேகானந்தர், தன்னுடைய தெளிவான வழிகாட்டுதல்களாலும், தன் எளிமையான வாழ்க்கை முறையாலும் பலரையும் கவர்ந்தார். குறிப்பாக, இளைஞர்கள் அவரது போதனைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். வாய்ப்பேச்சில் வல்லவர் என்ற சொற்றொடர் அவருக்கு மிகவும் பொருந்தும். தன் பேச்சுத் திறனால், தான் சொல்ல விழையும் கருத்துகளை கேட்பவர் மனதில் ஆழமாக பதிய வைக்கும் திறன் அவரிடம் இருந்தது.

அவரது வாழ்க்கையே ஒரு பாடம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவற்றுள் அவரது அறிவுறுத்தல்களின் (teachings) சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

ALSO READ: மாதத்தின் முதல் சனிக்கிழமை: உங்கள் ராசிபலன் எப்படி? எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • எழுந்திரு, விழித்திரு, உன் லட்சியத்தை நீ அடையும் வரை நிற்காதே.
  • நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுகிறாய். உன்னை பலவீனமானவனாக எண்ணினால், பலவீனம் அடைகிறாய். பலம் கொண்டவனாக எண்ணிக்கொண்டால், பலசாலி ஆகிறாய்.
  • ஒரு லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதையே உன் வாழ்க்கையாக்கிக்கொள். அதையே சிந்தித்திரு. அதை நோக்கியே பயணம் செய். அதற்காக நேரத்தை செலவிடு. உன் லட்சியத்தை நீ சென்றடைவாய்.
  • ஒரு நாயகனாய் உன் வாழ்க்கையை நடத்து. எதைக் கண்டும் அஞ்சாதே. நேர்மையான பாதையில் வாழ்க்கையை நடத்து.
  • ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனத்தை செலுத்து. அதில் உன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து விடு.
  • உன் மேல் நம்பிக்கைக் கொள். அது உன்னை உயர்த்தும்.

விவேகானந்தரின் வாழ்க்கையின் பல சம்பவங்கள் நமக்கு வாழ்க்கைக்கான மிகப்பெரிய வழிகாட்டுதல்களாக இருந்துள்ளன. ஒரு மனிதனின் தோற்றமோ, ஆடையோ அவனது அடையாளமல்ல. அவனது சொல்லும் செயலும் எண்ணமுமே அவனது அடையாளம் என்பதைக் கடல் கடந்து சென்று அமெரிக்காவில் உணர்த்தியவர் அவர். 1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோவில் (Chicago), உலக அளவில் பல நாட்டு அறிஞர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்தியா சார்பாக சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார். அவர் பேசுவதற்கு முன்னர், அவரது தோற்றம், உடை மற்றும் நிறத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய அனைவரும், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என அவர் தன் உரையைத் துவக்கியதும் வாயடைத்து நின்றனர். அவர் பேசப் பேச, மற்ற அனைத்தும் மறந்து அவரது வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அவரது சிந்தனைகள்  செவி வழியே அனைவரது இதயங்களை சென்றடைந்தன. விவேகானந்தர், விவேகம் இருந்தால், வெற்றி நிச்சயம் என உலகுக்கு உணர்த்திய நாள் அது.

நம் நாட்டில் அந்த மாமனிதர் அவதரித்ததற்கு நாம் பெருமைப் படும் அதே நேரம், அவர் காட்டிய வழியைப் பின்பற்றி நம் வாழ்வையும் ஒரு சரித்திரமாக மாற்றுவோம்.

ALSO READ: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு!!

Trending News