விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க, ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி!!
ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கலன், நிலவில் தரை இறங்குவதற்கான விக்ரம் லேண்டர், ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய மூன்று பாகங்களைக் கொண்டது சந்திரயான் 2. நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், ஆர்பிட்டர் சுற்றி வரும் நிலையில், விக்ரம் லேண்டரை தரை இறக்கும் செயல்பாட்டை சனிக்கிழமை அதிகாலை இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் லேண்டர் இருந்த போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது. ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் என இஸ்ரோ கூறி இருந்தது. அதன்படி நேற்று பிற்பகலில் தெர்மல் இமேஜ் முறையில் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். லேண்டர் உடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் சிவன் தெரிவித்தார்.
இந்த நிலையில், நிலவுக்கு அருகே ஆர்பிட்டரை கொண்டு செல்லும் பட்சத்தில் தகவல் தொடர்பை மீட்டமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், லேண்டரின் துல்லியமான புகைப்படம் கிடைக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே தற்போது நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் சுற்றுத் தொலைவை 50 கிலோ மீட்டராகக் குறைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.