மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 ஆவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி..!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 2 முறை நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 176 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் நிறைவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்க 2-வது முறையாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
IPL 2020 தொடரின் 13-வது சீசன் எமிரேட்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதியது. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 'பேட்டிங்' தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
38 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ALSO READ | ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா சர்மா என்று Google search காட்டும் மர்மம் என்ன?
அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் பூரன் அவுட்டானார். 3-வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் ஒரு ரன்னும், 5வது பந்தில் 2 ரன்னும் கிடைத்தது. 6வது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன்னும்,2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் ஒரு ரன்னும் கிடைத்தது. 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.
இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.