பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவ் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதம் மற்றும் உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017, ஏப்ரல் மாதம் மரண தண்டனை வழங்கியது. குல்புஷனுக்கு தூதரக ரீதியிலான உதவியை பாகிஸ்தான் மறுத்ததால், இந்தியா அதே 2017 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றம் எனப்படும் ICJ -வை ( International Court Of Justice) அணுகியது.
இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி கொடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா குல்பூஷன் ஜாதவ் இன்று சந்தித்து பேசினார். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், குல்பூஷன் ஜாதவ் கடுமையான அழுத்ததில் இருப்பதாகவும், பாகிஸ்தானின் பொய்யான கூற்றுக்களை உயர்த்தி பிடிக்கும் படியான கருத்துக்களை கூறும்படி அவருக்கும் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது.