தேர்தல் முடியும் வரை நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் நகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் ஏதும் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக டி.ஜி.பி.,-க்கு உத்தரவு பிரப்பித்துள்ளது.
மேலும் மைதானங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
---மக்களவை தேர்தல் 2019---
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்த இரு அணிகளுக்குள்ளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.
இவர்களுக்கு போட்டியாக யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என கூறி தமிழகம் - புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் காண தயாராகவுள்ளது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. அதே வேலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க தயாராகி வருகிறது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றம் கட்சி.
மறுபுறம் தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமுல் படுத்தி தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம் போன்றவற்றை பிடித்து தேர்தல் ஆணையம் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை தன் பங்கிற்கு தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் ஏதும் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக டி.ஜி.பி.,-க்கு உத்தரவு பிரப்பித்து அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.