விடுதலை இந்தியாவில் சட்ட ஒழுங்கில் விழுந்த முதல் ஓட்டை மகாத்மா காந்தியின் மரணமாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு அடிமைபட்டு கிடந்த நம் நாடு 1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் விடுதலைப் பெற்றன. அதற்கு அண்ணல் காந்தியின் அறவழியே முன்நின்றன. இந்நிலையில், விடுதலை கொண்டாட்டத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில், ஓராண்டுக்குள்- அதாவது 1948ஆம் ஆண்டு சனவரி 30ஆம்நாள் உலகுக்கே அகிம்சையை போதித்த உலக உத்தமர்-நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, கோட்சே எனும் கொடியவனால் சுடப்பட்டு, துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார். 'அகிம்சையே அகிலத்தின் ஆணிவேர்' என்ற அண்ணலின் அகால மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் , நாடெங்குமுள்ள பெரும்பாலான மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர் ; ஓவென்று கூப்பாடு போட்டனர். அவர்களது அழுகையின் கூக்குரலானது ; அண்டை நாடுகளிலும் எதிரொலித்தன... அந்தளவிற்கு மகாத்மாவின் மரணச் செய்தி காட்டு 'தீ' போல் அதிவேகமாக பரவின.
இந்நிலையில், அன்றைய இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், " இந்திய விடுதலைக்காக எங்களை எதிர்த்து குரல் கொடுத்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு உரிய பாதுகாப்பை பலப்படுத்தினோம் ; அவரது உயிருக்கு உத்தரவாதம் அளித்தோம். அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாங்கள் அவரைக் கொல்லவில்லை ; பத்திரமாக பாதுகாத்தோம். ஆனால், நாடு விடுதலையடைந்து ஓராண்டுக்கூட நிறைவடையாத நிலையில், விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, அதில் வெற்றிகண்ட உங்க தேசத் தலைவரை நீங்களே கொன்றுவிட்டீர்களே" என்று ஆதங்கத்தோடு சொன்னார். அது என்னவோ மறுக்கமுடியாத ஒன்றுதான்.. சர்ச்சிலின் இந்தப் பேச்சால் நம் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் கூனி குறுகி, வெட்கி தலைகுனிந்து போயினர்.
மேலும் படிக்க | மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் - டக்கென பிடித்த போலீசார்
ஒரு நாட்டின் தேசத் தலைவருக்கே இந்த நிலையென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? என்ற துயரநிலை அந்நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் எழாமல் இல்லை. அந்நாளில் மக்கள் மத்தியிலும் இத்துயரச் சம்பவம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. இச்சம்பவத்தை யாராலும் மறுக்கமுடியாது. இச்செயல் விடுதலை இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தேடித் தந்தன. ஏனெனில், விடுதலை அடைந்து ஓராண்டுக்குள் தேசத் தலைவரின் உயிருக்கு நம்மால் பாதுகாப்பு வழங்கமுடியாமல் போனது என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும் ; வெட்கக்கேடாகும். அண்ணல் காந்தியின் அகால மரணமானது ; விடுதலை இந்தியாவில் சட்ட ஒழுங்கில் விழுந்த முதல் ஓட்டை மட்டுமல்ல ; அது இந்திய வரலாற்றில் ஏற்பட்ட முதல் கரும்புள்ளியாகவும் அந்நாளில் அது பார்க்கப்பட்டது.
நாட்டு விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து ; அரும்பாடுபட்டு ; சிறைவாசம் அனுபவித்து ; அகிம்சை எனும் கொள்கையைக் கடைப்பிடித்து, அதன்மூலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய விடுதலைக்கு வித்திட்டார், நம் தேசப்பிதா. அவரது அகிம்சை எனும் அறவழிக்கொள்கையை உலக நாடுகள் பலவும் தலைவணங்கி வரவேற்றது. ஐ.நா.வும் மகாத்மா காந்தியின் கொள்கையான அறவழியைப் பின்பற்றுமாறு உலக நாடுகளுக்கு வலியுறுத்தியது. இன்றளவும் அது தொடர்கிறது. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது ; அகிம்சை எனும் அறவழியே உலக அமைதிக்கு வழிவகுக்கும் என்பதில் மகாத்மா அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை விதையை அவர் உலகெங்கிலும் தூவினார். அதன் பயனாக இரண்டாம் உலகப் போரால் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்த அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் விழிப்படைய தொடங்கின.
அதன்பின் கண்ணியமிக்க காந்தியடிகளின் அகிம்சை எனும் கொள்கைக்கு உலகரங்கில் ஆதரவு பெருகின. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்வோம்" என்கிற அண்ணலின் தாரக மந்திரத்துக்கு அதிகபட்ச வரவேற்பும் கிடைத்தன. அதற்கேற்ப, ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொள்ளும் போர் முறையை கைவிட்டுவிட்டு, நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண பல்வேறு நாடுகள் முன்வந்தன. மேலும் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கு அண்ணல் காந்தியடிகளின் அகிம்சையே அடிதளமிட்டன; மேலும் இன்றளவும் மூன்றாம் உலகப்போர் மிகப்பெரிய அளவில் மூளாமல் இருப்பதற்கு மகாத்மாவின் அகிம்சை எனும் அறவழியே பாதுகாப்பு அரணாக உள்ளன. சனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு சகிப்புத்தன்மை என்பதே மகாத்மாவின் பதிலாக இருந்தது. அதன்படி மக்களின் விருப்பப்படியே அரசியல் அமைப்பு அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே அவரது தீர்க்கமான முடிவாகும். அதுவே மக்களாட்சி மலர துணை நிற்கும் என்றார் காந்திஜி.
மதங்களைக் கடந்த மனிதத்தை மட்டுமே மகாத்மா விரும்பினார். ஏனெனில், "மனிதன்தான் மதத்தை உருவாக்குகிறான் ; மதங்கள் மனிதனை உருவாக்குவதில்லை" என்கிற கார்ல்மார்க்ஸ் தத்துவக் கோட்பாட்டை காந்திஜி ஆதரித்தார். அதன்படி விடுதலை இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக்கவே விரும்பினார். அதில் உறுதியுடன் இருந்து வெற்றியும் கண்டார். நம் நாட்டில் பல்வேறு மதத்தினர், இனத்தினர் வசித்து வருகிற போதிலும் ; அவர்கள் அனைவரும் வேற்றுமையிலும் ஒற்றுமை உணர்வுவோடு வாழ்ந்து வருவதற்கு மகாத்மாவின் மதசார்பற்ற கொள்கையே முக்கிய காரணியாகும். மதவழிபாடு என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல ; தனிமனித உரிமையுமாகும். அதற்கேற்ப, இங்கு வசிப்பவர்கள் எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளலாம். மேலும், அவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற செய்வதற்கு முழுமுதற் காரணமாக இருந்தார், நம் தேசப்பிதா.
காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஒருமுறை தென்னாப்பிக்கா பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவரிடம், "தங்கள் நாட்டு விடுதலைக்காக 27ஆண்டுகள் கொட்டடி சிறையில் தனிமைப்படுத்தப் பட்டீர்கள், அதிலும், பல இடையூறுகள், துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியில் எப்படி சிறையில் காலம் கழித்தீர்கள் என்கிற கேள்வியை கலாம் முன்வைத்தார். அதற்கு "மகாத்மா கையாண்ட அறவழிதான் மூலகாரணமாகும்" என்று முகமலர கூறினார், மண்டேலா. மகாத்மாவின் அறவழியானது உலகெல்லாம் சென்றடைந்ததற்கு இதுவே தக்கதொரு சான்றாகும். மேலும் தன்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கோட்சேவை தண்டித்துவிடாதீர்கள் ; மன்னித்துவிடுங்கள் என்று மரணத் தறுவாயில் பெருந்தன்மையுடன் மகாத்மா அளித்த வாக்குமூலத்தால் ; காந்தியின் உடலுக்குள் ஊடுருவி துளைத்தெடுத்த கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகள் அனைத்தும் அவரது அகிம்சை எனும் அறவழி கொள்கைக்கு முன்னால் தோற்றுப் போய்விட்டன என்பதுதான் உலகியல் உண்மையாகும். மகாத்மா இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் ; அவரது அறவழி கொள்கையின் மூலம் மக்களின் ஆழ்மனதில் வேரூன்றிவிட்டார். இன்று அக்டோபர் 30, மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும். அன்று அவரால் ஊன்றபட்ட அகிம்சை எனும் அறவழி விதையானது ; இன்று விருட்சமாகி உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ