மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நான் உயிரை விடக்கூட தயாராக இருக்கிறேன் ஆனால் மத்திய அரசுடன் சமரசம் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். மம்தா நேற்றிரவு முதல் மத்திய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சினை பாராளுமன்ற அவைகளையும் கடுமையாக பாதித்தது.
சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியது, "தெருக்களில் திரிணாமூல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தொந்தரவு செய்த போது கூட நான் சாலைக்கு வரவில்லை. ஆனால் இந்த நேரத்தில் கொல்கத்தா போலிஸ் ராஜீவ் குமாரை அவமானப்படுத்தியதால், எங்களுக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. அதனால் தான் சாலைக்கு வந்துள்ளேன். நாங்கள் போலீஸ் கமிஷனரை ராஜீவ் குமார் அவமதிக்க விடமாட்டோம். நாம் உயிருடன் இருக்கும் வரை எந்த சமரசம் செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று இரவு சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்தச்சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், சிபிஐயை கண்டித்து திரிணாமுல் காங்கிரசார் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளதால், மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க முடிவு செய்தது மோடி அரசு.
மம்தாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.