மோடியின் விமானத்திற்கு அனுமதி வழங்க பாக்.,யிடம் இந்தியா கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு அனுமதி வழங்கக் கோரி பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது!

Updated: Jun 9, 2019, 12:42 PM IST
மோடியின் விமானத்திற்கு அனுமதி வழங்க பாக்.,யிடம் இந்தியா கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு அனுமதி வழங்கக் கோரி பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது!

கிர்கிஸ்தான் நாட்டில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்லும் போது, அவரது விமானம் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு அந்நாட்டிடம், மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெயிஷ் இ தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 CRBF வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழி  தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது. 

இந்த நிலையில், வரும் 13, 14 ஆகிய தேதிகளில், கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்தினால் 4 மணி நேரம் மட்டுமே செலவாகும். மாற்று வழித்தடத்தில் சென்றால் 8 மணி நேரம் விரயமாகும்.

எனவே நேர விரயத்தைத் தவிர்க்க, பாகிஸ்தான் வான்பரப்பில் மோடியின் விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும் என, இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.