வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்!
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக-விற்கு எதிராக தேசிய அளவில் மகா கூட்டணியை அமைக்க எதிர்கட்சிகள் முயன்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைமயிலான இக்கூட்டணியில் இடம்பெறுவது குறித்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இச்சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சி தலமையிலான கூட்டணி விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை ஏன் நடத்தவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்து சீதாராம் யெச்சூரி “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் தற்போது காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.