புதுடெல்லி: தேர்தலுக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுந்து உள்ளன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முன்னதாக மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என மத்திய மந்திரிகள் குழு நேற்று முன்தினம் முடிவு செய்தது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது மரபாக இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான திட்டங்களும், செலவினங்களும் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முடிவு கட்டி, பட்ஜெட்டை நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே அதாவது ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்தும் விதத்தில், முன்கூட்டியே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என முடிவு எடுத்தது.
5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பட்ஜெட் பிப்ரவரி தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பட்ஜெட்டானது அரசுக்கு நியாயமற்ற நன்மையை கொடுக்கும், சலுகை திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் வாயிலாக என கூறியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்வதை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளன.
2014-ம் ஆண்டு பட்ஜெட் தேர்தல்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்டது, என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் கால தாமதம் தேவையில்லாதது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் புகார் கொடுத்து உள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரிக் ஒ பிரையான் கூறியுள்ளார்.