இந்தியாவில் நாச வேலை செய்வதற்கான சதி திட்டம் தீட்டும் பாகிஸ்தான்...

ஆஃப்கானிஸ்தானிற்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைக்கான சதியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Jun 6, 2020, 11:58 AM IST
இந்தியாவில் நாச வேலை செய்வதற்கான சதி திட்டம் தீட்டும் பாகிஸ்தான்... title=

ஆஃப்கானிஸ்தானிற்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைக்கான சதியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா காலத்தில், அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், இந்த தொற்றுநோயிலிருந்து தங்கள் மக்களை காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் சீனாவும் பாகிஸ்தானும் தங்கள் குடிமக்களைப் பற்றி மறந்து பிற நாட்டு எல்லைகளின் மீது கவலைக்கொண்டுள்ளது. சீனா, இந்தியாவின் லடாக்கில் ஊடுருவ முயற்சிக்கிறது, பாகிஸ்தானோ ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாதிகளை அனுப்பி அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வருகிறது. ஆனால் இந்த இரு எதிரிகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்க இந்தியா தாயாராக உள்ளது.

சத்தீஸ்கரில் நடந்த மோதலில் சப்-இன்ஸ்பெக்டர், 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர்...

பாலாகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானிலிருந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட பயங்கரவாதிகள் அச்சமடைந்துள்ளனர் .  புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்ட போதிலும், அவர்களுக்கு, இன்னும் இந்திய மண்ணில் எந்த ஒரு பெரிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளவும் துணிச்சல் வரவில்லை. முதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக், பின்னர் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்தை, பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் வழங்கிய பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் நாயின் வால் ஒருபோதும் நேராக இருப்பதில்லை என்று கூறுவார்களே, அதுபோல, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முக்கிய பணியே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதான்.  அவர்கள் இப்போதும் அதில் முழு முனைபுடன் ஈடுபட்டுள்ளனர்

ஐ.நா.வின் சமீபத்திய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை இந்திய பாதுகாப்பு அமைப்புகளை எச்சரித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, பால்கோட் வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கால் பயந்துபோன பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்கிறது. இதன்படி, ஆப்கானிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தைபா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பாகிஸ்தானின் 6500 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அமெரிக்க இராணுவம், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஆகியவற்றுடன் இந்தியாவையும் நிலைகுலைய வைக்கும் சதியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் சமீபத்திய அறிக்கை கவலைக்குரியதாக உள்ளது  என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது . பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கை சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது என்ற இந்தியாவின் கருத்தை உறுதிபடுத்துகிறது என்று வெளிவிவகார அமைச்சும் கூறியுள்ளது.  இது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு, அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் வெளிப்படையான ஆதரவு இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் மீண்டும் கூறியுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  அவர்களுக்கு அரசாங்கமும் இராணுவமும் பயிற்சியளிப்பது மட்டுமல்லாமல், அவர்களால் நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஐ.நா.பாதுகாப்புக் குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியதை இப்போது பார்க்கலாம்....

'ஆப்கானிஸ்தானில் தற்போது 800 லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் மற்றும் 200 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை கூறுகிறது. இந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் மொஹமண்ட் பாஸ், துர் பாபா மற்றும் ஷெர்சாத் மாவட்டங்களில் உள்ளனர். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு எதிராக சதி செய்து வருகின்றன. இது தவிர, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளும் மொஹமண்ட் பாஸை ஒட்டியுள்ள லால் பூரா மாவட்டத்தில் முழுமையாக செயல்படுகிறார்கள். ஆப்கானிஸ்தான் குனார் மாகாணத்தில் 220 லஷ்கர் மற்றும் 30 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் உள்ளனர். இவர்கள் தலிபான்களுடன் நாச வேலைகளில்  ஈடுபட்டுள்ளனர்'

பல பெரிய அல்கொய்தா பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டு விட்டாலும்,  அமைப்பின் பல பெரிய போராளிகள் ஆப்கானிஸ்தானில் இன்னும் உள்ளனர் என்று பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அல்கொய்தாவும், வெளிநாட்டு போராளிகளின் குழுக்களும் தலிபானுடன் கூட்டணி வைத்துள்ளன.  ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த தனது கொள்கையை மாற்ற இந்தியா பரிசீலித்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது. சில காரணங்களால், ஆப்கானிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பாகிஸ்தானைப் போல தீவிரமாக செயல்படவில்லை.  மேலும் இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியா தலிபான்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதுதான்.  அமெரிக்கா, தாலிபாலுடனான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறது. ஆனால், தாலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது  பாம்புக்கு உணவளிப்பதைப் போன்றது என்பது இந்தியாவிற்குத் தெரியும். இப்போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தலையிடுவதை அதிகரித்து வருகிறார்கள். இதிலிருந்து இந்தியாவின் சந்தேகமும் தயக்கமும் முறையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இல்லாமல் தன்னை முழுமையானதாக ஏற்க முடியாத ஒரு நாடாகும். அதனால்தான் உலகம் முழுவதும் பல  கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டும் பாகிஸ்தான் திருந்தத் தயாராக இல்லை.  கொரோனா காலத்தில் அதன் நிதி நிலைமை மிகவும் மோசமானபோது, ​​பிரதமர் இம்ரான் கான் உலகின் பணக்கார நாடுகளிடமிருந்து கிண்ணத்தைக் கையில் எடுக்காத குறையாக உதவி கோரினார். உலகின் பணக்கார நாடுகளைப் போல பாகிஸ்தானிலும் லாக்டௌன் செய்யப்பட்டிருந்தால், அங்கு 15 கோடி மக்கள் பட்டியின் விளிம்பை அடைந்திருப்பார்கள் என இம்ரான் கானே ஒப்புக்கொண்டார்.  ஆனால் எல்லாவற்றையும் மீறி, இந்த நாடு பயங்கரவாதத்திற்கு பண உதவி செய்ய மட்டும் தயங்காது. ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவது பற்றி கூற வேண்டுமானால், சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் பாலாகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, தன் மண்ணிலிருந்து நேரடியாக பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு பாகிஸ்தான் அச்சப்படுகிறது என்றே தோன்றுகிறது.

நாட்டை உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்டர்; நடந்தது என்ன?

உண்மையில், ஆப்கானிஸ்தானை ஒரு புதிய பயங்கரவாத தளமாக மாற்ற பாகிஸ்தானுக்கு ஒரு  திட்டமிட்ட சதியை செய்திருக்கலாம்.  ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக துருப்புக்கள் இருப்பதால் அமெரிக்கா மிகவும் பிரச்சனையில் உள்ளது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். அந்த நாட்டின் பொருளாதாரமும் நீண்ட காலமாக பாதிக்கப்படுகிறது . ஆகவே பிப்ரவரி மாதம் தாலிபானுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பாகிஸ்தானை முக்கிய பங்கு வகிக்கச் செய்தது.

கடந்த பிப்ரவரி 29 அன்று தோஹா கத்தாரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் தலிபானுக்கு இடையிலான ஒப்பந்தத்தில், அமெரிக்கா  மிகுந்த அக்கறை செலுத்தியது.  அதுவும் அந்த ஒப்பந்தத்தில் எங்கும் சமாதான ஒப்பந்தம் என்று எழுதப்படவில்லை. உலகம் அதை சமாதான ஒப்பந்தம் என்று அழைத்த போதிலும், ஆப்கானிஸ்தான் இப்போது ஒரு புதிய வகையான நிச்சயமற்ற நிலைக்குள் நுழையப் போகிறது என்று இந்த ஒப்பந்தத்தின் அரசியல்  வல்லுநர்கள் தெளிவாக நம்புகிறார்கள். ஏனெனில் அமெரிக்கா தனது இராணுவத்தை அங்கிருந்து விடுவிப்பதில் ஆர்வமாக உள்ளது. ஆனால் அதன் பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து அமெரிக்கா கவலைப்படவில்லை..

9/11-க்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் நிறுத்தியுள்ளது என்பதை  நாம் அறிவோம். ஆனால் அல்கொய்தாவை அழித்து அதன் தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்றதன் மூலம், அமெரிக்காவின் பணி கிட்டத்தட்ட நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது அமெரிக்கா ஆப்கானிஸ்தானைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இன்னும் சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர். எப்படியிருந்தாலும், அமெரிக்கா அவர்கள் பாதுகாப்பாக் நாடு திரும்ப வேண்டும் என்றே விரும்பும். தாலிபானுடனான ஒப்பந்தத்தை அமல்படுத்திய பின்னர், அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தம் முடிவுக்கு வரும் என்பதும் உறுதி. ஆனால் தாலிபான் போன்ற ஒரு பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சியில் பங்கு கிடைத்தால், இந்தியா உட்பட இப்பகுதியின் பல நாடுகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

டொனால்ட் டிரம்ப் 2016 ல் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆசிய நாடுகளில் இருந்த தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதாக மக்களுக்கு நம்பிக்கை அளித்தார். இந்த ஆபத்தான போரை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் பிரச்சாரத்தின்போது கூறினார். அதன்படி  அவர் தனது படைகளை சிரியாவிலிருந்து விலக்கிக் கொண்டார். சிரியாவிலிருந்து அமெரிக்க இராணுவம் திரும்பிய பிறகு அங்குள்ள நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேசப் படைகள் விலகிய பின்னர், அந்த நாட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. பிப்ரவரி 29 அன்று தலிபானுடன் நடந்த பெரும்பாலான ஒப்பந்த விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.  

வெளிவந்த சில விவரங்களின் படி, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக விட்டு வெளியேறும். மேலும் அரசியல் உத்திகளுக்காக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 135 நாட்களில் தற்போதைய அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 13,000 லிருந்து 8,600 ஆகக் குறைக்கப்படும். அமெரிக்காவின் நட்பு நாடுகளான நேட்டோவின் சுமார் 16,000 வீரர்களும் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.. ஒப்பந்தத்தின்படி, அவர்களின் எண்ணிக்கையும் முதல் கட்டத்தில் 12,000 ஆகக் குறைக்கப்படும். பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ப தலிபானின் அணுகுமுறை இருந்தால், அனைத்து துருப்புக்களும் 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும் என்றும் இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ முன்னிலையில் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெளிவான பார்வை உள்ளது. இந்த ஒப்பந்தம் தலிபான்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து விட்டது என இந்தியா நம்புகிறது . அல்கொய்தாவுடனான உறவை முடிவுக்குக் கொண்டு வந்து இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவதாக தலிபான்கள் உறுதியளித்திருந்தாலும், தாலிபான்கள் தங்கள் வாக்குறுதியை எந்த அளவிற்கு செயல்படுத்த முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு படையினருடனான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேசப் படைகள் திரும்பப் பெறுவது தற்செயல் நிகழ்வு அல்ல, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத குழுக்கள் வளர்ந்து வருவதாக ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருக்கிறதா? அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் இல்லை என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச துருப்புக்கள் திரும்பச் செல்வதை பாகிஸ்தான் ஒரு நல்ல வாய்பபாகப் பார்க்கிறது என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது சட்டப் பிரிவு வாபஸ் பெறப்பட்ட  பிறகு, பாகிஸ்தான் பெரும் சிக்கலில் உள்ளது. அதை எதிர்து பாகிஸ்தான் உலக  அரங்கில் மன்றாடியது. ஆனால் இந்தியாவின் திறமையான அரசியல் ஆளுமைக்கு முன்னால் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இப்போது ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவை சுற்றி வளைக்க அதனிடம் ஒரு வழியே உள்ளது. அதுதான் பயங்கரவாதம். இதற்காக அது ஆப்கானிஸ்தான் நிலத்தைப் பயன்படுத்தக்கூடும்.

பாகிஸ்தான் இந்தியவிற்கு எதிராக தன் சொந்த மண்ணிலிருந்து சதி செய்தாலும், அயலார் மண்ணை வாடகைக்கு எடுத்தாலும், எப்போதும் போலவே, அடிபட்டு ஓடும் என்பது உறுதி. எல்லையில் எதிரியின் படைகளைகளை தவிடுபொடியாக்கக் காத்திருக்கும் நம் வீரர்களின் உறுதியும், படைகளுக்கு பக்கபலமாக இருக்கும் நாட்டு மக்களின் நல்லாசிகளும் அதற்கு சாட்சியம் அளிக்கின்றன.

மொழியாக்கம்: ஸ்ரீப்ரியா சம்பத்குமார்  

Trending News