கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம், மன உறுதியின் அடையாளம், திறனின் அடையாளம் என ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி பேச்சு!!
டெல்லி: நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச அளவில் போர் களச்சூழல் மாறி உள்ளதால் அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீனமயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20 வது ஆண்டு விழா டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில் பேசிய பிரதமர் மோடி, கார்கில் போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானது அல்ல, அது நாட்டின் வெற்றி என்றார். 20 ஆண்டுக்கு முன்னர் கார்கில் போர் நடைபெற்ற போது, போர்களத்திற்கே சென்று வீரர்களை சந்தித்த தாக அவர் கூறினார். வீர ர்களின் தியாகத்தால் நாடு பெரும் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக மோடி கூறினார். நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், உயர்த்தப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சில நாடுகள் பயங்கரவாத த்தை மறைமுகமாக தூண்டி விடுவதாக அவர் கூறினார். பயங்கரவாத த்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்று பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
#WATCH live from Delhi: Prime Minister Narendra Modi addresses at #KargilVijayDiwas commemorative function. https://t.co/cPXCIYq11N
— ANI (@ANI) July 27, 2019
நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று மோடி தெரிவித்தார். விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச அளவில் போர்க்கள சூழல் மாறி உள்ளதால் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதை மத்திய அரசு தலையாய நோக்கமாக கொண்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.