ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதன்கிழமை ஒன்பது மாநில மொழிகளில் தீர்ப்புகளை வழங்கும் உச்சநீதிமன்றம் திட்டத்திற்கு பாராட்டு..!
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்தவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை பெற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு மாநில மொழிகளில் கிடைக்கும். ஆங்கிலம் தெரியாத இந்தியக் குடிமகன்கள் இதனை எளிதில் அணுக முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to receive and be introduced to translations of 100 important judgments of the Supreme Court. These will now be available in a variety of regional and Indian languages, and accessible to hundreds of millions of our fellow citizens who may not know English #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 17, 2019