நில மோசடி வழக்கில் சிக்கியுள்ள ராபர்ட் வாத்ராவின் ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ராஜஸ்தானில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015-ஆம் ஆண்டு குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின்னர் அதனை அதிக விலைக்கு, ஒரு நிறுவனத்துக்கு விற்றுள்ளது. இந்த விற்பனையில் பண மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறி அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஜெயப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவுரீன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னதாக முன்னிநிலை படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ராபர்ட் வாத்ராவுக்கு சொந்தமான ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துகளை, தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி:
லண்டனில் பிரையன்ஸ்டன் பகுதியில் சொத்து வாங்கியதில் 1.9 மில்லியன் பவுண்டுகள் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை பிரியாங்காவின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டார். தொடர்ந்து ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்ரவரி 6 ஆம் தேதி அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராகவும் வைப்புத் தொகையாக ரூ.1 லட்சம் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமாரிடம் `விசாரணைக்கு `தன் கட்சிக்காரர் முழுமையாக ஒத்துழைப்பார்' என்று உறுதிமொழி அளித்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே மனோஜ் அரோரா என்பவரிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முதலில் மனோஜ அரோரா அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை தன்னிடம் விசாரணை நடத்துவதாகக் கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். சிறப்பு நீதிமன்றத்திலும் புகார் தெரிவித்தார். வெளிநாட்டில் ராபர்ட் வதேராவுக்கு உள்ள சொத்துகள் குறித்து அனைத்து விவரங்களும் மனோஜ் அரோராவுக்குத் தெரியும் என அமலாகத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
அரோராவின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் பதிலளித்த அமலாக்கத்துறை, `கறுப்புப் பணம் பதுக்கிய விவகாரத்தில் வருமானவரித்துறை மனோஜ் அரோராவிடம் நடத்திய விசாரணையின் போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்காவின் கணவர் லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் மனோஜ் அரோராவின் கைங்கரியம் இருப்பது தெரியவந்தது. எந்த அரசியல் பின்புலமும் இந்த வழக்கில் இல்லை'' என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து ராபர்ட் வாத்ரா அமலாக்க துறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார், இதனையடுத்து தற்போது ராபர்ட் வாத்ராவின் ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!