கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தவும் கோரி யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான 9 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், பாதுகாப்பு துறைக்கான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றியே ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு துறை கொள்முதல் குழு அனுமதி அளித்திருப்பதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.