பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட NRC - NPR பேராபத்தானவை: எச்சரிக்கும் ராகுல் காந்தி

தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2019, 01:32 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட NRC - NPR பேராபத்தானவை: எச்சரிக்கும் ராகுல் காந்தி title=

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய சிவில் பதிவேடு (NRC) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொள்ள அசாம் மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசை கடுமையாக சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த திட்டங்கள் அனைத்தும் பணமதிப்பிழப்பு 2.0 பதிப்பாகும் என்று ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார். 

இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 135 வது நிறுவன நாள் என்பதால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி என பாஜக கூறியதை குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "எனது ட்வீட் மற்றும் தடுப்பு மையத்தின் வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா? அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நீங்கள் கேட்டீர்களா? அதில் நாட்டில் எங்குமே தடுப்புக் காவல் முகாம்கள் இல்லை எனப் பேசியிருப்பார். அதற்கு அடுத்து அந்த வீடியோவில் தடுப்பு மையத்தை குறித்து காட்சிகள் இருக்கும். யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ராகுல் மேலும் கூறுகையில், "CAA மற்றும் NRC மூலம் ஏழைகளை வரிசைப்படுத்தவும், அதன் 15 தொழிலதிபர் நண்பர்களுக்கு உதவவும் அரசாங்கம் விரும்புகிறது."

உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றுக்கூறிய ராகுல், "இது மக்களுக்கு ஏற்பட்ட பணமதிப்பிழப்பு பாதிப்பின் 2 ஆம் பாகம் போன்றது. ஏனெனில் அவர்கள் ஏழைகளை தங்கள் ஆவணங்களைக் காட்டும்படி கேட்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தொழிலதிபர்களிடமிருந்து ஆவணங்களைக் கேட்க மாட்டார்கள்" என்று கூறினார்.

கடந்த வியாழக்கிழமை அன்று தடுப்புக்காவல் மையம் இல்லை என்று பிரதமர் பேசியதற்கு, முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் (RSS) பிரதமர் பாரத மாதாவிடம் (இந்தியா) பொய் சொல்கிறார் எனப் பதிவிட்டு, ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். அந்த வீடியோவில் தடுப்புக்காவல் மையம் கட்டப்பட்டு வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த பதிவில் #JhootJhootJhoot (பொய்,பொய்,பொய்) என மூன்று தரம் குறிப்பிட்டு ஹேஷ்டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பதிவுக்கு பதில் அளித்த பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா, ராகுல் பொய்யர்களின் தலைவர் என்றும், அவரிடமிருந்து மாண்பையும் மரியாதையையும் எதிர்பார்ப்பது தவறானது என்றும் விமர்சித்திருந்தார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராமலீலா மைதானத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் - சில நகர்ப்புற நக்சல்களும் - அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். நாட்டில் உள்ள முஸ்லிம்களை யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பமாட்டார்கள் மற்றும் இந்தியாவில் எந்த தடுப்புக்காவல் மையங்களும் (Detention Centre) இல்லை. தடுப்புக்காவல் மையங்கள் இருப்பதாகக் கூறுவது உண்மை இல்லை. முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. CAB மற்றும் NRC ஆகியவை நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தாது” என்று விளக்கம் அளித்திருந்தார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News