பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இனி மேல் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியன இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அதே சமயம் ரயில்வே துறை சுயமாக செயல்படும் உரிமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். திட்டம் மற்றும் திட்டமிடப்படாத சீர்திருத்தங்களுக்கான அறிவிப்புக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்படும்.
ஓய்வுபெற்ற சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தை உயர்த்தவும், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான தற்போதைய நிதியாண்டு வரையறை மாற்றி அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிதியாண்டு வரையறை மாற்றம் தொடர்பாக பொருளாதார ஆலோசகருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு 2016-ம் ஆண்டு சுதந்திர தினம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியையும் 20 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிதியாண்டு மாற்றத்திற்கு ஆலோசனை கூற முன்னாள் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார்.
பட்ஜெட் அறிவிப்புக்களை உடனடியாக அமல்படுத்த எளிதாக இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பட்ஜெட் தொடர்பான அனைத்து துறைகளின் பரிந்துரைகள் நவம்பர் 15-ந்தேதிக்குள் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.