மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளது.
ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியாதவது:- ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்ளடக்கிய பகுதி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகவே உள்ளது. காஷ்மீர் நிலை குறித்து ஒவ்வொருவரும் வேதனைப்படுகிறார்கள். அங்கு நிலையை சீராக்கவே நாங்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். காஷ்மீரில் நிச்சயம் அமைதி ஏற்படும் என நம்புகிறேன். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு காஷ்மீர் விவகாரம் குறித்து யார் பேச விரும்பினாலும் அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் காஷ்மீர் மக்களை சந்தித்துள்ளோம். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாநில அரசிற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். பிரிவினைவாதிகளுடன் பேச சில உறுப்பினர்களை அனுப்பினோம். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். பிரிவினைவாதிகள் விரும்புவது காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிப்பது மட்டுமே அங்கு வாழும் மக்களின் மனித நலத்தை அல்ல. வன்முறைகளை இடுப்பவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேற்றத்திற்கான ஒரே வழி.
பிரிவினைவாத தலைவர்களை அழைத்து பேச வேண்டும் என சில கட்சி பிரதிநிதிகள் கூறுகிறார்கள். அதனை நாங்கள் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மிளகாய்ப் பொடி கொண்ட கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் யாரையும் கொல்லவோ, படுகாயம் ஏற்படுத்தவோ இல்லை என்றார்.