குஜராத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்!!

Last Updated : Aug 8, 2017, 08:47 AM IST
குஜராத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்!! title=

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. 

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட 3 எம்.பி.க்களின் பதவிகாலம் நிறைவடைவதையொட்டி, அந்த இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜகவில் அண்மையில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகிய 3 பேரும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

இதில், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட 3 பேரில், அமித் ஷா, ஸ்மிருதி இரானியின் வெற்றி உறுதியாகும். 3-வது நபரான ராஜ்புத், காங்கிரஸின் அகமது படேல் ஆகியோரிடையேதான் போட்டி நிலவுகிறது. இருவரில் யாருக்கு 45 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதோ, அவரே வெற்றி பெற முடியும். இதனால், 45 உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட பாஜக, காங்கிரஸ் ஆகியவை தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இதில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸுக்கு, குஜராத் சட்டப் பேரவையில் காந்தல் ஜடேஜா, ஜெயந்த் படேல் ஆகிய 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஜடேஜா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசுகையில், கட்சி மேலிடம் எங்களை, பாஜக வேட்பாளர் ராஜ்புத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது எனவே ராஜ்புத்துக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார்.

அதேநேரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரும், காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்குதான் வாக்களிப்பர் என்றார்.

மேலும் காங்கிரஸின் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா அண்மையில் கட்சியில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அகமது படேல் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending News