UP election: கருத்து கணிப்பா? அல்லது திணிப்பா - உ.பியில் எழும் கலக்குரல்

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2022, 01:05 PM IST
  • உத்தரப்பிரதேசத்தில் வெளியாகும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்
  • தடை விதிக்கக்கோரி சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
  • கருத்து கணிப்பா? அல்லது திணிப்பா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி
UP election: கருத்து கணிப்பா? அல்லது திணிப்பா - உ.பியில் எழும் கலக்குரல் title=

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச தேரதல் களம் மிக பரபரப்பாக உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் பா.ஜ.க, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்து அச்சு மற்றும் சாட்டிலைட் ஊடகங்களிலும் தொகுதி வாரியாக அலசி ஆராயப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. 

ALSO READ | UP Election 2022: SP- RLD கூட்டணியின் சாதி அடிப்படையிலான தொகுதி பங்கீடு

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், தேர்தல் கணிப்புகள் என்ற பெயரில் ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமாக கருத்து திணிப்புகளை நடத்தி வருவதாகவும், இது வாக்களிக்கும் மக்களை திசை திருப்பும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய இந்த கணிப்புகள் வெளியிடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தேர்தல் கருத்து கணிப்பு தொடர்பாக லோக்நிதி (Lokniti National Election Study) என்ற அமைப்பு தேசிய அளவில் தேர்தல் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் ஒட்டுமொத்த இந்தியர்களில் 100 பேரில் 35 பேர் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்ற முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளது. எஞ்சிய 65 பேர் தேர்தலுக்கு முந்தைய சில நாட்களில் மட்டுமே முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்படி, 65 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலுக்கு மிக நெருக்கமான நாட்களில் மட்டுமே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

ALSO READ | 25 ஆயிரம் வாக்காளர்கள் இறுதியாக வாக்களிக்கவிருக்கும் 11 கிராமங்கள்

அந்த கடைசி கட்ட வாக்காளர்களில் பெரும்பாலானோர் யார் வெற்றி பெறுவார்கள்? என்று பொதுவெளியில் கூறப்படுகிறதோ, அதனடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பதாகவும் லோக்நிதி ஆய்வு தெரிவிக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களிப்போம் என்ற மனநிலையில் 100 பேரில் 30 பேர் இருப்பதாக கூறுகிறது. இந்த வாக்காளர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 

தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பதாக கூறும் அந்த ஆய்வு, கருத்துக் கணிப்புகள் இவற்றில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கிறது. உள்ளூர் கிராமப்புற MGNREGA வேலை வாய்ப்பு, மருத்துவமனை அனுமதி, பள்ளிச் சேர்க்கை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு உள்ளூர் நிர்வாகிகளை சார்ந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், மக்கள் முடிவெடுப்பதாக லோக்நிதி ஆய்வு கூறுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு வாக்களித்தால் தான் தங்களுக்கு அடிப்படை அரசு உதவிகள் கிடைக்கும் என்பதால், இத்தகைய முடிவுகளை கிராமப்புற மக்கள் எடுக்கிறார்கள் எனத் தெரிவிக்கும் ஆய்வு, கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் வெற்றிபெற வாய்ப்புள்ளவர்களுக்கு வாக்களிப்போம் என்ற மன நிலைக்கு மக்கள் நுட்பமாக தள்ளப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.  

அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் அனைத்துக் கணிப்புகளும் உண்மையானதா? என பொதுவெளியில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தபட்சம் ஆயிரம் வாக்காளர்களிடம் தகவல்களை சேகரிக்க வேண்டும். அவை சாதி, அந்த தொகுதி பிரச்சனை, பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோணங்களிலும் அலசி ஆராயப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும், அந்தளவுக்கு செலவு செய்து கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுகின்றனவா? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

’உடைந்த கடிகாரம் ஒரு நாளைக்கு இருமுறை சரியாக மணி காட்டுவதுபோல்’ தான் தேர்தல் நேரங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் இருக்கின்றன என்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News