மகளின் திருமணத்திற்கு 700 கோடி ரூபாய் செலவிடும், சில செல்வந்தர்கள் சமூகம் குறித்த அக்கறையற்றவர்கள் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் விமர்சனம்!
ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும், பிரபல வைர உற்பத்தி தொழிலதிபர் அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிரமாலின் திருமணம் சமீபத்தில் மும்பையில் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து, ஜம்முவில், படைவீரர்கள் நல சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், செல்வந்தர்களில் ஒரு பிரிவினர் தர்ம காரியங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவிடுவதில்லை என்றும், அவர்களை அழுகிய உருளைக்கிழங்குகள் போல தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். மகளின் திருமணத்திற்கு 700 கோடி ரூபாய் செலவிடும் நாட்டின் மிகப்பெரிய செல்வந்தரிடம் தர்ம காரியங்கள் செய்கிறீர்களா என ஒரு செய்தியாளர் கேட்டதாகவும், அதற்கு அந்த செல்வந்தர் தர்ம காரியங்கள் செயவதில்லை, மாறாக நாட்டின் செல்வத்தை அதிகரிக்கச் செய்வதாக பதிலளித்தகாவும் சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.
மகளின் திருமணத்திற்கு 700 கோடி ரூபாய் செலவிடுவதன் மூலம் அவர் நாட்டின் செல்வத்தையா அதிகரிக்கச் செய்கிறார் எனவும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் கேள்வி எழுப்பினார். ஐரோப்பாவிலும் இன்றும் பல நாடுகளிலும் செல்வந்தர்கள் அறக்கட்டளைக் வைத்து தர்ம காரியங்கள் செய்வதாகவும், மைக்ரோசாஃப்ட் உரிமையாளர் தமது வருவாயில் 99 சதவீதத்தை தர்ம காரியங்களில் செலவிடுவதாகவும் சத்யபால் மாலிக் கூறினார்.