BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது!
BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்தது செல்லாது எனவும், குற்றம்சாட்டப்தபட்ட 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது
BSNL illegal telephone exchange case: Supreme Court today dismissed the appeal filed by Dayanidhi Maran. He had appealed before the Supreme Court against the Madras High Court order setting aside his discharge from the case
— ANI (@ANI) July 30, 2018
தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.
இதனால் அரசுக்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் கடந்த மார்ச் 14ஆம் நாள் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவினை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் நான்கு பேர் மட்டுமே தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தது தவறானது என முறையிடப்பட்டிருந்தது. மேலும் சிபிஐ தரப்பு வாதத்தை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சிபிஐ நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 பேரையும் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 25-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சிபிஐ மேல்முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்ற கலாநிதிமாறன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, இவ்வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட அவர், இவர்கள் 7 பேரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வழக்கை சந்திக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.
இந்த ஆணையினை எதிர்த்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவினை விசாரித்த விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துவிட்டது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.