CBI முன்., இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

சிபிஐ முன்., இயக்குனர் நாகேஷ்வர் ராவுக்கு ரூ. 1லட்சம் அபராதம் மற்றும் நாள் முழுவதும் அறையின் ஓரத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2019, 02:02 PM IST
CBI முன்., இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம் title=

லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. லஞ்ச புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இருவரையும் அழைத்துப் பேசினார். பின்னர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாயா விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. கடந்த 23 ஆம் நாள் நள்ளிரவு 2 மணியளவில் சிபிஐ-யின் புதிய இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது மத்திய அரசு. 

நாகேஸ்வர ராவின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கட்டாயா விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குனராக ஆலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்க வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ-யின் இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவ் பதவி விலகும் நிலை ஏற்ப்பட்டது.

நாகேஸ்வர ராவ் சிபிஐ-யின் இடைக்கால இயக்குனராக இருந்த போது அப்பொழுது சிபிஐ இணை இயக்குனராக இருந்த ஏ.கே.சர்மாவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இந்த இடமாற்றத்தை எதிர்த்து ஏ.கே.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய இரண்டு உத்தரவுகளை நாகேஸ்வர ராவ் மீறி உள்ளதாக கூறி, அவருக்கு எதிராக பிப்ரவரி 7 ஆம் தேதி நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினார்.

அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய பின்னர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை நாகேஸ்வர ராவ் தாக்கல் செய்தார். அதில், நான் செய்தது தவறு தான். நான் என் தவறை உணர்கிறேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை. நான் கனவிலும் கூட நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்று நினைத்தது இல்லை எனத் தெரிவித்தார்.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மன்னிப்பு கேட்பதால் மட்டும் தவறு சரி ஆகாது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறியது குற்றம் தான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு நாள் முழுவதும் நீதிமன்ற அறையின் ஓரத்தில் அமர்ந்து இருக்க வேண்டும் எனக் கூறி அதிரடியான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி.

Trending News