பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குற்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்தியாவிடம் அமெரிக்கா வழங்கியது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 7 பாதுபாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லபட்டனர்.
பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து வந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. எனவே அந்த இயக்கம் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா அறிவுறுத்தியது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவுப் அஸ்கர் உள்பட 4 தீவிரவாதிகள் தொடர்பான சில ஆதாரங்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. மேலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பிரதமர் மோடியும் கேட்டுக்கொண்டார். ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய பங்கு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்களை இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கி உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, ஆயுதங்கள் வாங்க பணம் திரட்டிய அமைப்பு பயன்படுத்திய பேஸ்புக் மற்றும் இணையதள முகவரிகள் பாகிஸ்தானில் உள்ளன மேலும் பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பயன்படுத்தி பேஸ்புக் குழுவின் ஐபி முகவரிகளையும் கொடுத்து உள்ளது.
இந்த பேஸ்புக் பக்கத்தில் தான், பதன்கோட் விமானபடை தளத்தில் பலியான பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பான ஐ.பி., முகவரிகள் கராச்சியில் உள்ள மலிர் நகரில் சமூக நல கூடத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐ.பி., எண் பாகிஸ்தானில் உள்ளதை அமெரிக்கா உறுதிபடுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.