கொரோனா தாக்கம்!! நாட்டின் நிலைமை எங்கே? எப்படி? 10 முக்கிய செய்திகள்

சமீபத்திய கிடைத்த தகவலின் படி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 17, 2020, 07:11 PM IST
கொரோனா தாக்கம்!! நாட்டின் நிலைமை எங்கே? எப்படி? 10 முக்கிய செய்திகள்
Pic Courtesy: Pixabay image used for representational use only

புது டெல்லி: உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு (Corona virus Impact in india) குறைவாக இருப்பதால், ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், மறுபக்கம் அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 137 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள மால்கள், பள்ளி கல்லூரிகள், சினிமா அரங்குகள் போன்றவற்றை மூட அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று (Coronavirus Alert) தொடர்பான 10 முக்கிய செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்!!

1. எந்த மாநிலத்தில், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 22 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 137 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இறந்தார். கோவிட் -19 காரணமாக மகாராஷ்டிராவிலும் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து உறுதியான செய்தி இல்லை. நாட்டின் தலைநகரான டெல்லியில் இதுவரை ஏழு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில், ஒரு வெளிநாட்டவர் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினர் உட்பட 39 நோயாளிகள், கர்நாடகாவில் எட்டு பேர், லடாக்கில் நான்கு பேர், ஜம்மு-காஷ்மீரில் மூன்று பேர் மற்றும் தெலுங்கானாவில் நான்கு நோயாளிகள் உள்ளனர். ராஜஸ்தானில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாபில் தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. ஒடிசாவில் திங்களன்று கோவிட் -19 இன் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ள உள்ளது. இது தவிர, ஹரியானாவில் பாதிக்கப்பட்ட 15 பேரில் 14 பேர் வெளிநாட்டினர், உத்தரகண்டிலும் ஒருவருக்கு வந்துள்ளது. கேரளாவில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 24 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அதிலிருந்து மீண்ட மூன்று பேர் இதில் அடங்குவர்.

2. கொரோனாவை தோற்கடித்தவர், தோற்றவர் யார்?
மூன்று கேரள நோயாளிகள் உட்பட மொத்தம் 13 பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் தொற்று மூலம் மூன்று பேர் இதுவரை இறந்துள்ளனர். செவ்வாயன்று, துபாயில் இருந்து திரும்பிய மும்பையை சேர்ந்த 64 வயது நபர் இறந்தார். முன்னதாக செவ்வாய்க்கிழமை, சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது நபர் மரணம் அடைந்தார். அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்ட 126 பேருடன் தொடர்பு கொண்ட 52,000 க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3. பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையை ரூ.50 ஆக உயர்த்திய இந்தியன் ரயில்வே:
கொரோனா வைரஸ்-ன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியன் ரயில்வே செவ்வாய்க்கிழமை (மார்ச்-17) ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலை குறைக்க நாட்டின் 250 ரயில் நிலையங்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை ரூ.10 முதல் ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது.

4. இந்த நாடுகளிலிருந்து பயணம் செய்ய தடை?
அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக அமைப்பு, துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் செல்வதை தடை செய்துள்ளது. இது 2020 மார்ச் 18 முதல் நடைமுறைக்கு வரும்.

5. கொரோனாவுக்கு பயந்து பாராளுமன்றம் மூடப்படாது:
கொரோனா வைரஸ் அச்சத்தை அடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுமா? எனக் கேள்விகள் எழுப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லதா ஜோஷி, கொரோனாவுக்கு பயந்து பாராளுமன்றம் மூடப்படாது எனத் தெளிவுப்படுத்தி உள்ளார். பிரதமர் தலைமையிலான பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். திட்டமிட்டப்படியே பாராளுமன்றம் ஏப்ரல் 3 வரை இயங்கும்.

6. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை - மோடி அரசாங்கத்தை பாராட்டிய சிதம்பரம்:
செவ்வாயன்று மக்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க மோடி அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் இந்த முயற்சிக்கு அரசாங்கத்தை ஆதரிக்க அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். அதாவது ஜீரோ ஹவர் இந்த விவகாரத்தை எழுப்பியதோடு, கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க அரசாங்கம் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது அரசியல் ஆக்கக்கூடாது என்றும், இது தொடர்பாக அனைவரும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

7. கொரோனாவுக்கு இடையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வேண்டும்:
கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கியுள்ள கார்கிலின் லேவைச் சேர்ந்த 836 ஷியா முஸ்லிம்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவையில் லடாக்கில் இருந்து பாஜகவின் ஜே.டி. நம்கியால் எழுப்பினார். காங்கிரஸைச் சேர்ந்த எச்.வசந்த்குமார் ஜீரோ மணி நேரத்தில் ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரியின் மீனவர்களை மீண்டும் அழைத்து வருமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

8. கொரோனா அச்சம்.. நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைத்த முதல்வர் கமல்நாத்:
கொரோனாவின் அச்சத்தைக் காட்டி, மத்திய பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் என்.பி. பிரஜாபதி சட்டசபை கூட்டத்தை மார்ச் 26 வரை ஒத்திவைத்துள்ளார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதியின் இந்த முடிவை பாஜக நீதிமன்றத்தில் சவால் செய்துள்ளது. இதன் பின்னர், கமல்நாத் அரசிடம் புதன்கிழமை வரை உச்ச நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

9. சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா ஏற்படும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு!!
சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் அறிவித்துள்ளார்.

10. கொரோனா தொடர்பான ரயில்வே ஹெல்ப்லைன்:
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டால், பயணிகள் 139 மற்றும் 182 என்ற ஹெல்ப்லைன் எண்களில் தெரிவிப்பதன் மூலம் உடனடி உதவியைப் பெறுவார்கள். இந்த எண்கள் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஹெல்ப்லைன் எண்களில் வரும் தகவல்கள் நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.