கடந்த 4 ஆண்டுகளாக மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியை நிறுத்தியது மலேசிய அரசு!!
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவைச் சேர்ந்த MH370 விமானம் 227 பயணிகள், 12 பணியாட்கள் உட்பட 239 பேருடன் நடு வானில் மாயமானது. உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம், விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மீது பெரும் விமர்சனங்களை முன்வைக்கக் காரணமாகத் திகழ்ந்தது.
நீண்ட நாட்கள் தொடர்ந்த தேடுதல் பணியையடுத்து விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்றும், இதில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் மலேசிய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்பின், மலேசிய விமானத்தை தேடும் பணி நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணி இன்றுடன் நிறுத்திக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 நாட்களாக தேடுதல் பணி தொடர்ந்ததாகவும், சிறு தடயம் கூட கிடைக்கவில்லை என்றும், விமானத்தை தேடி திரும்பவும் கடல் பகுதிக்கு செல்லப்போவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.