சல்மான்கான் வேட்டையாடிய “கலைமான்” பற்றி தெரிந்துக்கொள்வோம்!!

சல்மான்கான் வேட்டையாடிய அரிய வகை “கலைமான்கள்” இந்தியாவில் தோன்றியவை என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்!!

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 01:23 PM IST
சல்மான்கான் வேட்டையாடிய “கலைமான்” பற்றி தெரிந்துக்கொள்வோம்!! title=

20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அரிய வகை மானாக இரண்டு கருப்பு மானை (கலைமான்) வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசமும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சிக்கிய நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

சல்மானுக்கு 5 ஆண்டு சிறை - 500 கோடி இழக்கும் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தண்டனை பெற்றதை அடுத்து, பாலிவுட் திரையுலகம் ஏறக்குறைய 500 கோடி இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வளவு இழப்புக்கு காரணமான அரிய வகை மானாக கலைமானை வேட்டையாடியது தான். 

கலைமானை பற்றி தெரிந்துக்கொள்வோம்..!!

ஆங்கிலத்தில் கறுப்பு மான் (Blackbuck)  என்ற பொருளில் அழைக்கப்படும் கலைமான்கள் இந்தியத் துணைக்கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்டது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த மான்கள் தற்போது இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், அமெரிக்கா டெக்சாஸ் மாநிலம் மற்றும் அர்ஜென்டினாவில் வாழ்கின்றன. இந்த மான்கள் பெரிய சிறப்பே வாழும் இடத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிகொள்கின்ற பண்பு பெற்றுள்ளது என்பதே.

இந்த வகை மான்கள் ஒரு காலத்தில் அகன்ற சமதரை வெளிகளில் பெருந்திரள்களாக காணப்பட்டன. ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், இந்த அறிய மான் வகைகளின் தொகை குறைந்துவிட்டது. தற்போது அரிய வகை மானான கலைமான்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் காணப்படுகின்றது. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. 

இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளது கலைமான்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 கிமீ (40-60 மைல்) வேகத்தில் பாய்ந்து செல்லும். உருவத்தில் பெண் மானைவிட ஆண் மான் பெரியது. ஆண் மான் சராசரியாக 34 முதல் 45 கிலோ வரையிலும், பெண் மான் 31 முதல் 39 கிலோ வரையிலும் எடை கொண்டிருக்கும். ஆண் மான் கறுத்த உடல்மயிர்ப்போர்வையும், கொம்புகளையும்  கொண்டிருக்கும். அதேபோல பெண் மான் பழுப்பு நிற உடல்மயிர் போர்வையுடன் காணப்படும். ஆனால் பெண் மானுக்கு கொம்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய வகை கலைமான்கள், தங்கள் இடங்களில் விளையும் புற்களையே உணவாக உட்கொள்கிறது. உணவாக உட்கொண்ட பிறகு ஓய்வு எடுப்பதற்கு பெரும்பாலும் அகன்ற சமதரை வெளிகளையே தேர்வு செய்கின்றன. அகன்ற சமதரையை தேர்வு செய்வதன் மூலம் தொலைவில் எதிரிகள் வரும் போதே தெரிந்துவிடும். இந்த மான்களின் கூட்டத்திற்கு வயது முதிர்ந்த மான் காவலாக இருப்பார். அப்படி எதிரிகள் வரும் பட்சத்தில் காவல் காக்கும் மான் எழும்பித் துள்ளி எல்லா மான்களையும் எச்சரிக்கும். உடனே மந்தையிலுள்ள மான்கள் அனைத்தும் எழுந்து உயர்ந்து துள்ளி ஒடும். இவை ஏறக்குறைய 3 மீ (10 அடி) உயரம் வரை செங்குத்தாக துள்ளும் ஆற்றலை கொண்டது.

இந்த வகை மான்கள் 1.5 வயது முதல் 2 வயதுக்குள் பருவமடைகின்றன. அதன் பின் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும், குறிப்பாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், பின்னர் ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் மிக கூடுதலான இனப்பெருக்கங்கள் நடக்கின்றன. இவற்றின் பேறுகாலம் 5 மாதங்கள் ஆகும். இந்த மான்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10-12 ஆண்டுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட சுமார் 50 லட்சத்துக்கு மேல் இருந்ததாக கூறப்பட்ட கலைமான்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது சுமார் ஒரு லட்சத்திற்கும் கீழான எண்ணிக்கையில் குறைந்தன. தற்போது இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கலைமான்கள் தான் இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் இது துல்லியமான கணக்கெடுப்பு இல்லை விலங்கு நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கலைமான்களுக்கு இதிகாசங்களில் முற்கால முதலே முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசத்தின் மாநில விலங்கு அந்தஸ்தை கலைமான்கள் பெற்றுள்ளது.

(தகவல்: விக்கிப்பீடியா)

Trending News