கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!

வீட்டை விட்டு வெளியில போகவே அவ்வளவு பயம். கொரோனா தொத்திக் கொள்ளும் என்று ரொம்ப  பேர் வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். எல்லாத்துக்கும் குழப்பமும் பதற்றமும் தான் காரணம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 06:30 PM IST
  • நாளை என்ன இன்றைய நடக்குமோ என்ற பதற்றம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது. நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும்
  • நம்பிக்கை உங்களுக்குள் இருந்தால் மட்டும் போதாது. அதை மற்றவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்
  • தூங்குவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழ பழகுங்கள். தூக்கம் குறைந்தால் ஊக்கம் கெடும்.
கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!! title=

வீட்டை விட்டு வெளியில போகவே அவ்வளவு பயம். கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று ரொம்ப  பேர் வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் குழப்பமும் பதற்றமும் தான் காரணம். இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் வைத்துக் கொண்டால், எப்படி  இதில் இருந்து தப்பிக்கலாம் என்று உங்களுக்கு அத்துப்படி ஆகி விடும். இதோ டிப்ஸ்…

1.நேர்மறை எண்ணம் பாதுகாப்பு தரும்:

எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தப்பே இல்லை. ஆனால், வரம்பை மீறி போய் விடக்கூடாது. கதவை பூட்டிவிட்டு திரும்ப திரும்ப இழுத்துப் பார்த்தது மாதிரி ஆயிடும். நாம் வெளியில போயிட்டு வர்றோமே. வீட்டுல இருக்கறவங்களுக்கு பரப்பி விட்டால், என்ன செய்யறதுங்கற பதற்றம் இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. எதிர்பார்ப்பும்; நிஜமும் பல சமயங்களில் எதிரெதிராகவே இருக்கும். அதனால், எந்த விதமான முன்னெச்சரிக்கையை பின்பற்ற வேண்டும் என தெரிந்து கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே நம்பிக்கை தரும். தேவையற்ற பதற்றம் மனதை தளரச்செய்து விடும்.

2.தேடாதீர்கள்… பதறாதீர்கள்:

பயத்தில் பலர் இன்டர்நெட்டில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கிடைப்பது எல்லாம் ஆதாரமானதல்ல. அதிகாரப்பூர்வ இணையதளங்களை விட்டு விட்டு புரளி கிளப்பும் வெப்சைட்களை பார்த்தால் பயம்தான் அதிகரிக்கும்.

ALSO READ | மலை போல் குவியும் கொரோனா கழிவு.. இயற்கையை கெடுத்து ஏற்படுத்தும் பேரழிவு..!!!

3. நீங்களே ரோல் மாடலா இருங்கலாம்:

எது சரி என தெரிந்து கொண்டு அதை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு உறுதியாக தெரிந்த வழிமுறைகளை குடும்பத்தினர், நண்பர்களுக்கு சொல்லுங்கள். நீங்களே ரோல் மாடலாக இருந்து வழிநடத்துங்கள். நம்பிக்கையும், தெம்பும் தானாக வரும்.

4.நிகழ்வே நிஜம்:

நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது. இன்றைய நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும். இன்று என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள். நாளைக்கான திட்டமிடல் நல்லதுதான். ஆனால், எதிர்காலம் என்னவாகுமோ என்ற பதற்றம் கூடாது. இன்றைய வாழ்க்கை உங்கள் கையில். இதை எதற்காகவும் நழுவ விட்டு விடாதீர்கள்.

5. புதிய சிந்தனை புத்துணர்ச்சி தரும்:

கொரோனாவுக்கு முந்தைய நடைமுறைகள் பல, கொரோனா பரவலுக்கு பிறகு மாறிவிட்டது. பள்ளியில் வகுப்பெடுக்கும் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பை பற்றி யோசித்திருப்பாரா? கொரோனா வந்த பிறகு ஏற்பட்ட புதிய மாற்றம் இது. காலத்துக்கேற்ப ஏற்படுத்தும் புதிய சிந்தனைதான் உங்களை புத்துணர்வோடும் துடிப்போடும் வைத்திருக்கும். காலத்துக்கு எப்போதுமே அந்த சக்தி உண்டு. அது உங்களை இழுத்துக்கொண்டு போகும்போது, நீங்களும் ஓட வேண்டியது காலத்தின் கட்டாயம்தான்.

ALSO READ | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...எண்ணமே செயலாகும்... சிந்தனையே சிறப்பாகும்..

6.நம்பிக்கையை விதையுங்கள்:

நம்பிக்கை உங்களுக்குள் இருந்தால் மட்டும் போதாது. அதை மற்றவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்களுடன் இருப்பவர் குழப்பத்தில் இருந்தால் தெளிவுபடுத்துங்கள். கொரோனா பயத்தை போக்குங்கள். நம்பிக்கையூட்டுங்கள். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருங்கள்.

7. வீட்டிலிருந்து வேலையா?

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் பலர், எந்த நேரமும் ஆபீஸ் வேலைதான் என அலுத்துக் கொள்கின்றனர். நாளெல்லாம் அடிமைப்பட்டமாதிரி ஒரு நினைப்பு. இதை திறமையோடு நிர்வகிக்க வேண்டியது நீங்கள்தான். வேலை எப்போது, ரிலாக்சாக இருப்பது எப்போது என முடிவு செய்யுங்கள். வேலைக்கென வீட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்குங்கள். ஆபீசில் இருந்து போன் வந்தால் கூட, அங்கு சென்றுதான் பேச வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே உங்களுக்கு வேலைக்கும் ரிலாக்சுக்கும் நேரமும் வித்தியாசமும் தெரிந்து விடும்.

ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!

8.தூக்கம் ஆக்கம் தரும்

தூங்குவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழ பழகுங்கள். தூக்கம் குறைந்தால் ஊக்கம் கெடும். இதை புரிந்து கொள்ளுங்கள். துக்கம் சரியில்லை என்றால் உற்சாகமாகவும் இருக்க முடியாது

9.டிஜிட்டல் வாழ்க்கை ஆபத்து

எப்போதும் டிஜிட்டல் உலகிலேயே மூழ்கிக்கிடப்பது சரியல்ல. பலருக்கு வேலை, பொழுதுபோக்கு என எல்லாமே கம்ப்யூட்டர், மொபைல் போனில்தான். கொஞ்சநேரம் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டினருடன் வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள்.

10. அன்பானவர்களை அரவணையுங்கள்

வீட்டில் மற்றவர்களோடு அரவணைப்போடு பழகுங்கள். சமவயது உள்ளவர்களுடன் அரட்டை ஒருபுறம் இருந்தாலும், வயதானவர்களை புறக்கணித்து விடாதீர்கள். தனிமை அவர்களை வாட்ட அனுமதிக்கவே கூடாது. அவர்களுடனும் போதுமான நேரத்தை செலவிடுங்கள்.

11. மன அழுத்தத்தை அளவிடும் கருவி:

மன அழுத்தத்தை அளவுக்கும் கருவியும் உங்கள் மனம்தான். சோர்வு, பசி, தூக்கம் வராமல் தவித்தல், ஆர்வம் குறைவது, வாழ்க்கை முறையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் என எல்லாமே மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான். இதை கண்டுபிடிக்க தெரிந்து விட்டால் போதும். உடனே அதில் இருந்து எளிதாக விடுபட வழி பிறக்கும்.

12. ஆதரவுக்கரம் நீட்டினால் நிம்மதி வரும்:

பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மன நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் ஈடு, இணையே கிடையாது. உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். நிர்பந்திக்காதீர்கள். ஆனால், சரியான வழிகாட்டி உதவுங்கள்.

Trending News