மாரிமுத்து மறைவு: 'சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணம்...' - வைரமுத்து உருக்கம்

Actor Marimuthu Death: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 8, 2023, 11:43 AM IST
  • அவருக்கு வயது 56.
  • வைரமுத்துவிடம் மாரிமுத்து உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
  • அவர் 2 திரைப்படங்களை எடுத்துள்ளார்.
மாரிமுத்து மறைவு: 'சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணம்...' - வைரமுத்து உருக்கம் title=

Vairamuthu Condolensces On Marimuthu Demise: பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து இன்று மாரைப்பு காரணமாக உயிரிழந்தார். 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' என இரண்டு படங்களை இயக்கியுள்ள மாரிமுத்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர் மிகவும் பிரபலமானார். 

மாரிமுத்து இயக்குநராவதற்கு முன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். வைரமுத்து மட்டுமின்றி இயக்குநர் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மாரிமுத்துவின் மரணத்திற்கு பல்வேறு திரை நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

மரணத்தின் பள்ளத்தாக்கு...

இந்நிலையில், மாரிமுத்து உயிரிழந்ததை அடுத்து கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இரங்கற்பா வடிவில் அவர் வெளியிட்ட பதிவு கீழ்வருமாறு:

"தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன் 

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்"

என வைரமுத்து உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சமீபமாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' தொடர் மூலம் பரந்துப்பட்ட ரசிகர்களை கொண்டவராக மாரிமுத்து உருவெடுத்தார். எதிர் நீச்சலின் டப்பிங்கின் போது மாரடைப்பால் மயங்கியுள்ளார். அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

மேலும் படிக்க | 'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனின் புது அவதாரம்..! ரஜினி டைலாக் பேசி மாஸ் காட்டிய மாரிமுத்து..!

அவரின் மறைவுக்கு குறித்து எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம்,"காலையில் டப்பிங் முடித்துவிட்டு ஷூட்டிங் வருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எதிர்நீச்சல் சீரியல் டீமே கடும் அதிர்ச்சியில் இருக்கிறோம். அவரது குடும்பத்துக்கு இது பேரிழப்பு" என கண்ணீரோடு தெரிவித்தார்.

போயிட்டுவாப்பு... 

தொடர்ந்து, மாரிமுத்து இயக்கிய இரண்டு படங்களிலும் நடித்தது, அவருக்கு நண்பருமான நடிகர் பிரசன்னா அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்,"இயக்குனர் ஜி. மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும் கண்ணும், புலிவால் இணைந்து பணியாற்றினோம். எங்களுக்கு சகோதரர்கள் போன்ற பந்தம் இருந்தது. பலவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக செயல்பட்டோம்.

அவரது வாழ்க்கை எளிதானது அல்ல. தற்போது தான் ஒரு நடிகராக அவர் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்க வேண்டும். போயிட்டுவாப்பு" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

திறமைசாலி

மேலும், நடிகை ராதிகாவும் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில், "மாரிமுத்துவின் மறைவைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

திறமைசாலியான அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News