சென்னையில் நேற்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
அரசு துறைகளிடம் முறையான அனுமதி பெற்றே கட்டிடத்தை கட்ட முன்வந்தோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. எந்த தவறும் நடக்கவில்லை. இதனை கோர்ட்டில் சுட்டிக்காட்டினோம்.
தற்போது நடிகர் சங்க கட்டிடத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட்டு நீக்கியிருக்கிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடித்துவிடுவோம். எனவே ஒரு வருடத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வருமானம் வரக்கூடிய வழிவகைகளும் செய்யப்படும். நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்குள் முதல் நிகழ்ச்சியாக எனது திருமணம் நடைபெறும்.
ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. ரூ.120 வரையிலான சினிமா டிக்கெட்டுகளுக்கு இதே வரியை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.
நடிகர் கமல்ஹாசன் பிரச்சினையில் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயம் அவருக்கு துணையாக நான் இருப்பேன். திருட்டு வி.சி.டி. மற்றும் திருட்டுத்தனமாக புதிய படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.