வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்து 15 வருடங்கள் போராட்டத்துக்கு பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் எஸ்.கே. வெற்றிச்செல்வன். எண்ணித்துணிக என்ற தனது முதல் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருக்கிறார்.நகைக்கடையில் நடக்கும் கொள்ளையால் பாதிக்கப்படும் சாமானியன் எண்ணித்துணிந்து என்ன செய்கிறான் என்பதை சுவாரசியம் குறையாமல் கூறியிருக்கிறார் வெற்றிச்செல்வன். காதல், காமெடி என வலம் வந்த ஜெய் இந்தப் படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். எடுத்திருக்கும் அவதாரம் அவருக்கு பொருந்தியும்போவது ப்ளஸ். அதேசமயம் ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து பல காட்சிகளில் பழைய ஜெய்யே தெரிகிறார். அதுல்யாவை பொறுத்தவரை தனக்கான கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்.
கதை சாதாரண கதைதான் என்றாலும் அதை காப்பாற்றுவது திரைக்கதைதான். ஒவ்வொரு போர்ஷனாக படம் விரிந்தாலும் இயக்குநர் அதை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் காட்சிகள் மனதில் பதியும் அளவு காதல் காட்சிகள் அவ்வளவாக பதியவில்லை. ஜெய், அதுல்யா இருவருக்குமான காதல் போர்ஷனில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
வில்லனாக வம்சியும், சுரேஷ் சுப்ரமணியனும் நடித்திருக்கிறார்கள். வம்சி வழக்கம்போல் தன் நடிப்பில் மிரட்ட மற்றொரு வில்லன் சுரேஷ் சுப்ரமணியனுக்கு அவ்வளவாக பெரிய வேலையில்லை என்றே தோன்றுகிறது. ‘அவ இல்லத்தரசி நீ இதயத்தரசி’, ‘இப்டிலாம் பண்ணா பிக்பாஸுக்கு கூப்டுவாங்கனு நினைப்பு’, ‘நகையை பிடிக்க சொன்னா புகையை பிடிச்சிருக்கிங்க இதுதான் புகை போட்டு பிடிக்கிறதா’ போன்ற வசனங்கள் கலகலப்பு ஏற்படுத்துகின்றன. சாதி குறித்த ஒரு கேள்விக்கு ஜெய் அளிக்கும் பதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஒன்றில் ஆரம்பித்து அடுத்த விஷயத்துக்கு சென்று மீண்டும் மற்றொரு விஷயத்த்தை தொட்டு அனைத்து விஷயங்களையும் இணைக்கும் திரைக்கதைக்கு எடிட்டிங் சிறப்பாக அமைவது மிக மிக அவசியம். அதை கனகச்சிதமாக செய்திருக்கிறார் எடிட்டர் சாபு ஜோசப். அதேபோல் படத்துக்கு மிகப்பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை.
மனிதர், பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சாம் சிஎஸ்ஸின் இசை அல்டிமேட் ரகம். படத்தில் பாடல்கள் குறைவுதான் என்றாலும் இருக்கும் இரண்டு பாடல்களும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. குறிப்பாக, என்னடியே என்னடியே பாடல். கார்த்திக் நேத்தா எழுதியிருக்கும் அந்தப் பாடலில் பல வரிகள் கவனம் கொள்ள வைக்கின்றன. வரிகளை ரசிப்பதா, இசையை ரசிப்பதா என குழம்பும் அளவுக்கு அந்தப் பாடல் இருக்கிறது.
அந்தப் பாடலின் மேக்கிங்கில் வெற்றிச்செல்வன், தான் வசந்த் பட்டறையிலிருந்து வந்தவன் என்பதை உணர்த்தியிருக்கிறார். மேக்கிங்கில் அவ்வளவு கூல். முக்கியமாக சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதை கோலிவுட்டுக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு நினைவுப்படுத்தியிருக்கிறார் வெற்றிச்செல்வன். வாழ்த்துகளும், நன்றிகளும்.
த்ரில்லர் பாணியில் ஆரம்பிக்கும் கதை அதே வேகத்தில் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க திடீரென காதல் காட்சிகள் உள்ளே வருவது முதல் பாதியில் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியை எழுப்பி முதல் பாதியை முடித்தது ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோர்வை நீக்கி ஆவலை எழுப்புகிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை பல முடிச்சுகளை அவிழ்க்கின்றன. அவிழும் முடிச்சுக்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன. பக்காவான திரைக்கதையோடு களமிறங்கிய வெற்றிச்செல்வன் படத்தின் நீளத்தை கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் என்ற நினைப்பு எழுகிறது.
மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்
க்ளாஸ் இயக்குநர் வசந்த்திடமிருந்து வந்திருந்தாலும் வெற்றிச்செல்வன் கமர்ஷியலை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதேபோல், இதுபோன்ற கமர்ஷியல் கதைக்கு திருக்குறளான ‘எண்ணித்துணிக’ என தலைப்பு வைத்ததும் அழகு. அனைத்தையும் மறந்து ஒரு ஜனரஞ்சகமான படத்தை ரசிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் துணிந்து எண்ணித்துணிக படத்துக்கு சென்று வரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ