ட்ரெண்டான'மல்லிப்பூ’ பாடல் உருவானது எப்படி?... அனுபவம் பகிரும் பாடலாசிரியர் தாமரை

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றிருக்கும் மல்லிப்பூ பாடல் உருவானது எப்படி என்பது குறித்து பாடலாசிரியர் தாமரை பகிர்ந்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 17, 2022, 05:08 PM IST
  • வெந்து தணிந்தது காடு படம் செப் 15ல் ரிலீஸ் ஆனது
  • படத்தில் மல்லிப்பூ பாடல் ட்ரெண்டாகியுள்ளது
  • பாடல் உருவானது குறித்து பாடலாசிரியர் தாமரை பகிர்ந்துள்ளார்
ட்ரெண்டான'மல்லிப்பூ’ பாடல் உருவானது எப்படி?... அனுபவம் பகிரும் பாடலாசிரியர் தாமரை title=

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் வெந்து தணிந்தது காடு. ஜெயமோகன் எழுதிய ‘ஐந்து நெருப்புகள்’ என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. படம் மட்டுமின்றி படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பா படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை தாமரை எழுதியிருந்தார்.  மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இந்நிலையில் மல்லிப்பூ பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Simbu

அவர் தனது பதிவில், “வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல்  பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி. இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது.  இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது.

 

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ?? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.  முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல். விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது தாமரையின் இந்தப் பதிவு நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க | தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News