நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்த வண்ணம் உள்ளன.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை இன்று (திங்கள்கிழமை) இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தியும் உடன் இருந்தனர்.
ரஜினியை சந்திப்புக்குப் பிறகு அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். அரசியலுக்கு வருவது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். நாங்களும் அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இது அவர் அரசியலுக்கு வரவேண்டிய தருணம். அவரை பாரதிய ஜனதா இயக்கவில்லை என்றார்.
நேற்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.