ராஜராஜ சோழன் இந்துவா?... போய் பொழப்ப பாருங்கப்பா - பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் காட்டம்

ராஜராஜ சோழன் இந்துவா என்ற விவகாரம் குறித்து நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் அறிக்கை அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 8, 2022, 03:06 PM IST
  • ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது
  • வெற்றிமாறன், கமல் உள்ளிட்டோருக்கு பலரும் எதிர்ப்பு
  • சரத்குமார் காட்டமாக இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்
ராஜராஜ சோழன் இந்துவா?... போய் பொழப்ப பாருங்கப்பா - பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் காட்டம் title=

பொன்னியின் செல்வன் படம் வெளியான சமயத்தில், ராஜராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை இப்படி கமல் ஹாசனும் வெற்றிமாறனின் கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாகவே பேசியிருந்தார். அவர் மட்டுமின்றி கருணாஸ், சீமான் உள்ளிட்டோரும் ஆதரவு நிலைப்பாடு எடுத்தனர். அதேசமயம் வெற்றியின் பேச்சுக்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதனால் சமூக வலைதளங்கள் முழுவதும் ராஜராஜ சோழன் குறித்த விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் இந்த விவகாரம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம் என வரையறுத்துள்ளது. 

1790ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் இருந்து மருவி இந்து என்று பெயரிடப்பட்டது. குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது?  குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்? மனிதனை  இப்போது  குரங்கு என்று சொல்வோமா?அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? 

Sarathkumar

தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?  கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு - வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா? சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

Sarathkumar

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது?

புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை  தடுப்பது எப்படி?   மாற்றுவது எப்போது?  மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி  சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

மேலும் படிக்க | இந்து மதம் இருந்துச்சுங்க...ஜகா வாங்கிய உலக நாயகன் கமல் ஹாசன்?

விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது.  அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ்  என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது. 

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின்  புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில்  இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News