சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே 28 அன்று நடத்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
"சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-05-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூன்றுபேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்துபேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து மூன்று நாட்களாக மதுரையில் போராடிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 01-06-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான தோழர்கள் ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகள்
சாதிய வன்கொடுமைகள் நிறைந்த பகுதிகளாகும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து இதனை எதிர்த்துப் போராடிவருகின்றனர். திருப்பாசேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் பள்ளர்கள் சுமார் 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மிகவும் சிறுபான்மையாகவுள்ள அவர்களைத் தொடர்ந்து இழிவுசெய்வதும் ஒடுக்குவதும் போன்ற வன்கொடுமைகளில் ஆதிக்கவெறிகொண்ட சாதியவாதிகள் ஈடுபட்டுவந்துள்ளனர்.
அண்மையில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவைப் பள்ளர்கள் கொண்டாடியுள்ளனர். அவ்விழாவின்போது சாதிவெறியர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வண்டிகளை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட பள்ளர்சமூக இளைஞர்களை அவர்கள் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர். அத்துடன், கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்நிலையில்தான் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார்
அளித்துள்ளனர். அதனையடுத்தே அந்தக் கொடூரமான தாக்குதலை சாதிவெறிக் கும்பல் நடத்தியுள்ளது. “எங்கள் மீதே புகார் கொடுக்கிற அளவுக்கு உங்களுக்குத் துணிச்சல் வந்துவிட்டதா” என்று கூச்சல் போட்டவாறுதான் சாதிவெறியர்கள் அத்தகைய கொலைவெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். சாதிவெறியர்களுக்குத் துணையாக பழையனூர் காவல்நிலைய அதிகாரிகள் சிலர் செயல்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ்வாறு செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரைத் தற்போது அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.