7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தியை நேற்று அரசு அவர்களுக்கு வழங்கியது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் பண்டிகை பரிசாக, மத்திய அமைச்சரவை 3 சதவீத அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த முடிவால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.
அடிப்படை சம்பளம் /ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 28 சதவீத அகவிலைப்படியுடன், தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 சதவிகித அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணமும் (டிஆர்) சேரும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ .9,488.70 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலை நிவாரணத்தை 11% அத்கரித்தது. இதன் மூலம் 17% ஆக இருந்த அகவிலைப்படி 28% ஆக அதிகரித்தது. இது 01.07.2021 முதல் அமலுக்கு வந்தது.
கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட முன்னோடியில்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021-ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அரசு முடக்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலை நிவாரணத்தை 01.07.2021 முதல் 28% ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த அரசு ஊழியர்களுக்கு தற்போது மத்திய அரசு மீண்டும் ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3% அகவிலைப்படி அதிகரிப்புக்கு தற்போது அரசு ஒப்புதல் அளித்து விட்டது.