உலகெங்கிலும் உள்ள மக்களின் உணவில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவாக உள்ளது. ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் அரிசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி சாப்பிட விரும்புகிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு வெள்ளை அரிசி சிறந்ததா அல்லது ப்ரவுன் ரைஸ் சிறந்ததா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது.
இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் அரிசி தினசரி உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இந்நாட்களில், அரிசி சாப்பிடுவது குறித்து மக்களுக்கு சில அச்சங்கள் அதிகமாகி வருகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கு வெள்ளை அரிசி சிறந்ததா அல்லது ப்ரவுன் ரைஸ் சிறந்ததா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது. இதைப் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
அமெரிக்க வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, 1 கப் (185 கிராம்) வெள்ளை அரிசியில் 242 கலோரிகள், 4.43 கிராம் புரதம், 0.39 கிராம் கொழுப்பு, 53.2 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 0.56 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. 1 கப் (200 கிராம்) பழுப்பு அரிசியில் (Brown Rice) 248 கலோரிகள், 5.54 கிராம் புரதம், 1.96 கிராம் கொழுப்பு, 51.7 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3.23 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது தவிர, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை வெள்ளை மற்றும் பழுப்பு அரிசி இரண்டிலும் காணப்படுகின்றன.
ப்ரவுன் ரைசில் தவிடுகள் மற்றும் மூல அரிசியின் அனைத்து பகுதிகளும் அப்படியே இருப்பதால், இது அதிக சத்தானதாகக் கருதப்படுகின்றது. ஆனால் வெள்ளை அரிசியில் இவை இருக்காது. மேலும் ஊட்டச்சத்துக்களும் மிகக் குறைவாகவே இருக்கும். ஆகையால் வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசி மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
ப்ரவுன் ரைசில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. சிறுநீரக நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசியைதான் சாப்பிட வேண்டும். ஏனெனில் சிறுநீரகம் முற்றிலும் ஆரோக்கியமாக இல்லாதபோது, இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களையும் அவற்றால் கட்டுப்படுத்த முடியாது. உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வயிற்றுப்போக்கு, ஐபிடி, பெருங்குடல் புற்றுநோய் நோய் உள்ளவர்கள், செரிமான அமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ப்ரவுன் ரைசை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது . வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் அது ஜீரணிக்க எளிதானதாக இருக்கிறது. (குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)