கோவை பீளமேடு அருகே ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததால் வாடிக்கையாளர்கள் பீதி!!
கோவை மாவட்டம் பீளமேட்டை அடுத்த தண்ணீர் பந்தல் சாலையில் அமைந்துள்ளது ஐடிபிஐ வங்கிக்குச் சொந்தமான ATM மையம். இந்த மையத்தில் நேற்று மாலை சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததை அங்கு பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் பீதியில் கத்தவே, அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தப் பாம்பு ATM இயந்திரத்திற்கு உள்ளே நுழைந்ததால் பாம்பை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த பீளமேடு போலீசார், சவுரிபாளையம் பகுதியில் வசித்து வரும் பாம்பு பிடிப்பவரான சஞ்சய் என்ற இளைஞரை அழைத்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் வங்கி ATM மைய பராமரிப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போலீசார், வங்கி அதிகாரிகளையும் வரவழைத்து ATM இயந்திரத்தை திறந்தனர். தொடர்ந்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ATM இயந்திரத்திற்கு உள்புறமாக ஒளிந்திருந்த பாம்பை மீட்ட வாலிபர் சஞ்சய், அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றார். இந்த வீடியோவை ANI செய்திநிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
#WATCH Tamil Nadu: A Snake found inside an ATM near Thaneerpandal Road in Coimbatore; later rescued by a snake catcher. ( 23.04.2019) pic.twitter.com/Yk6YSOIQVn
— ANI (@ANI) April 24, 2019