அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தால், அக்கட்சியின் வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே இந்த தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் தொண்டர்கள் கூறிவந்தனர். இந்த சூழலில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தது, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை, மக்களவைத் தேர்தல் தோல்வி ஆகியவை விவாதிக்க இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி பொது செயலளாரராக வேண்டும் என்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே” என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதே போல் செங்கோட்டையன் பொதுச்செயலளராக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரும் சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்த பொதுச்செயலாளர் பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். தற்போது மீண்டும் பொதுச்செயலளாரர் பதவி வேண்டும் என்பது போன்ற போஸ்டர்களால் அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.