நடிகர் விஜய் நடிப்பதற்காக திரைத்துறையில் கால் எடுத்து வைத்தபோதே அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுவிட்டது. தொடங்கியவர் வேறு யாரும் இல்லை. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஆம். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.
பின்னாட்களில் 2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய்யின் ரசிகர்களை கொண்டு மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் போன்றவற்றை செய்யும் நோக்கோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதையும் முன்னின்று செய்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது.
அந்த வரிசையில்தான் 2011ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சரும் ஆனார். அவரது வெற்றிக்கு நாங்கள் அணிலாக உதவினோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் எப்போதும் சொல்வார். ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.
அதைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் அரசியல் நெடி அதிகமாக வீசியது. விஜய் அரசியலுக்குள் நுழைவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வதாக பேசப்பட்டது. இது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் காதுகளுக்கு போக, அவர் இதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தலைவா படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தன. பின்னாளில் விஜய் ஜெயலலிதாவை பாராட்டி விடியோ வெளியிட்ட பின்னர்தான் தலைவா வெளியானது. அந்த சர்ச்சைக்கு பின்னர் விஜய் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்திவிட்டார்.
ALSO READ | விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: நடிகர் விஜய்யின் தந்தை அறிவிப்பு
இது ஒருபுறம் இருக்க எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். அவர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைத்ததற்கு காரணமே அதுதான் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்த தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டபோது நடிகர் விஜய் தலையிட்டு இதற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.
தன்னுடைய பெயரில் யாரும் அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தந்தை மீதே வழக்கு தொடர்ந்தார் விஜய் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்துக்கு பொது செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ-வை நியமித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் தீவிர விஜய் ஆதரவாளர். பொது செயலாளராக இருந்த அவர், உடனடியாக இயக்கத்தில் இருந்த எஸ்.ஏ.சி ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கினார். இயக்கத்தின் முழு கட்டுப்பாடும் புஸ்ஸி ஆனந்தின் கைக்கு வந்தது. இப்போதும் அவர்தான் நடிகர் விஜய்யின் முழுநேர வலதுகரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சம்பவத்துக்கு பின் வெளியான விஜய் மக்கள் இயக்க அறிக்கைகளில் தலைவர் விஜய் என்றே அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் வரை தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்து வந்தார். இதன்மூலம் விஜய் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதற்குமுன் வரை அறிக்கைகளில் ‘இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்று இருந்தது, இப்போது ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்று மாறியிருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது விஜய் தொடர்ந்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு அது. அப்போது எஸ்.ஏ.சி தரப்பில் விஜய் மக்கள் இயக்கம் களைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எஸ்.ஏ.சி தொடங்கிய ’இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்’ மட்டுமே களைக்கப்பட்டுள்ளது. விஜய் தலைவராக இருக்கும் ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ தன்னுடைய பணிகளை தொடரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பான முழுமையான தெளிவுபெற நடிகர் விஜய்யோ, அல்லது புஸ்ஸி ஆனந்தோ வாய்திறக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR