வாழ்க்கையில் வளம் பெற்று செழிப்பாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், ஒருவரின் வளர்ச்சிக்கு ஏற்ப எதிரிகளும் தீயவர்களும் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களால் நமக்கு வரும் துன்பங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஒருவரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள், வேலை, தொழிலில் மட்டுமல்ல, குடும்பத்தினராகவும் இருப்பார்கள்.
பகைவர்கள் இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்ய இறைவழிபாடு, அதிலும் காலபைரவர் வழிபாடு உறுதுணையாக இருக்கும். காலபைரவர் தன்னிடத்தில் யார் வருவார் என்று எப்போதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாராம்! அவரின் திருவடியை சரண் அடைந்தவர்களுக்கு காக்கும் கடவுளாக இவர் இருப்பார். பொதுவாக, காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அழிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னாலும், சிவனின் காலபைரவர் ஸ்வரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவம் முக்கியமானது. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வாழ்வில் வளம் சேர்க்கக்கூடியவர்.
காலபைரவர் வடிவம்
படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டார். அப்போது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். கர்வப்பட்டால், தலை தப்பாது என்பதை உலகிற்கு உணர்த்திய சிவ ஸ்வரூபம் காலபைரவர்.
காசியின் காவல் தெய்வம்
காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர். காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவர் கோவிலுக்கு சென்று வந்தால் தான் யாத்திரை பூர்த்தியாகும். சிவன் கோவில்களில் வடகிழக்கு மூலையில் கால பைரவருக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கும் பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வழிபாடு செய்வது சிறப்பு ஆகும்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
மன தைரியம் உண்டாகவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் நாம் காலபைரவரை வழிபட வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை காலபைரவர் வழிபாடு கைகொடுக்கும். கர்வத்தை அழித்து கடமையே வாழ்க்கையில் நிரந்தரம் என்பதை உணர்த்துபவர் காலபைரவர். காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தான் மிகவும் உகந்த நாளாக இருக்கிறது இந்த நாளில் வழிபாட்டை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
காலபைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு உகந்த அரளிப் பூவை சாற்றி, பைரவாஷ்டகம் படிக்க வேண்டும். மிளகு சேர்த்த உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். கால பைரவருக்கு நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.
தேங்காயை உடைத்த பிறகு, மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவது காலபைரவரின் அருளை பெற்றுக் கொடுக்கும். விசேஷம். அதேபோல காலபைரவருக்கு நெய் ஊற்றி அதில் மிளகுத் திரி போட்டு ஏற்றப்படுவதும் வழக்கம். ஆடையில்லாமல் நிர்வாணக் கோலத்தில் காட்சியளிக்கும் காலபைரவருக்கு சந்தனக்காப்பு போடுவதும், வடைமாலை சாத்துவதும் வாழ்க்கையில் எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ