ஹங்கேரியில் நடைப்பெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த போட்டி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்னும் பெருமையினை பெறவுள்ளார்.
உலக மல்யுத்த சாப்பியன் போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ஹங்கேரியைச் சேர்ந்த ரோமன் அஷாரினையும், 2-வது சுற்றில் தென்கொரியாவைச் சேர்ந்த லீ சியங்கையும், காலிறுதியில் மங்கோலியாவின் துல்கா துமர் ஒசிரையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து அரையிறுதியில் கியூபாவின் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் தங்கம் வெல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார் பஜ்ரங்.
இதற்கு முன்னதாக கடந்த 2010-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைப்பெற்ற உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் சாம்பியன் பட்டம் வென்றார். இவரை அடுத்து தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பினை பஜ்ரங் பெற்றுள்ளார்!