ஐதராபாத் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது.
ஆறு விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் வங்கதேச அணி தனது ஆட்டத்தை துவக்கியது.
சிறப்பாக விளையாடி வந்த சாகிப் அல் ஹசன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 14 பவுண்டரிகள் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய சபிர் ரஹ்மானும் விரைவில் வெளியேறினார். பின்னர் விளையாட வந்த மெஹ்தி ஹசன் மிராஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இவர் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து நிலத்து நின்று ஆடி வரும் முஷபிகுர் ரஹீம் சதம் அடித்தார். இவர் தொடர்ந்து நன்றாக ஆடி வந்தார். இறுதியில் அஸ்வின் பந்தில் சாகாவிடம் கேட்ச் அவுட் ஆனார். இவர் 262 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 299 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும், புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.