IND vs EN 3rd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள புதிதாக பெயர் மாற்றம் பெற்ற நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் முறையே இங்கிலாந்து, இந்திய அணிகள் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் வைத்துள்ளது. எனவே, இப்போட்டியின் மீது கடும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜடேஜா, சிராஜ் ஆகியோர் அணிக்கு திரும்ப, சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் இந்திய அணிக்கு அறிமுகமாகினர்.
முதல் நாளில் 2 சதம்
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்று முதல் நாளிலேயே இந்திய அணி 326 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரோஹித் சர்மா 131 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான் 62 ரன்களை எடுத்து துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜடேஜா 110 ரன்களுடனும், நைட் வாட்ச்மேன் குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மார்க் வுட் மூன்று விக்கெட்டுகளையும், ஹார்ட்லி ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சில ஓவர்களிலேயே குல்தீப் 4 ரன்களுக்கும், ஜடேஜா 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி உணவு இடைவேளை வரை 7 விக்கெட்டுகளை இழந்து 388 ரன்களை எடுத்தது. தற்போது இரண்டாம் செஷனில் 400 ரன்களை கடந்து இந்தியா விளையாடி வருகிறது.
நேற்று ஜடேஜா, இன்று அஸ்வின்
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது, அதாவது ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்டோர் ஆடுகளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் ஓடியதன் காரணமாக இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜடேஜா அதில் ரன் எடுக்க ஓடிய போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் அஸ்வினும் அதே பகுதியில் ஓடியதை அடுத்து இந்திய அணிக்கு அபராதம் விதித்து கள நடுவர் ஜோயல் வில்சன் அறிவித்தார்.
விதிகள் சொல்வது என்ன?
இதன்மூலம், இங்கிலாந்து அணி பேட்டிங்கிற்கு வரும்போதே, ஸ்கோர் 5 ரன்கள் என்ற நிலையில்தான் இருக்கும். MCC விதிகளில், "ஆடுகளத்திற்கு வேண்டுமென்றே அல்லது தவிர்க்க வேண்டிய சேதத்தை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஸ்டிரைக்கர் பந்தை அடிக்கும்போதோ அல்லது அடித்த பின்னரோ பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தால், அவர் உடனடியாக அதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். நியாயமான காரணமின்றி ஆடுகளத்தில் அவரது செயல்பாடு இருப்பதாக நடுவர் கருதினால், ஒரு பேட்டர் தவிர்க்கக்கூடிய சேதத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும்" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த ஒரு இன்னிங்ஸில் ஒரே ஒரு வார்னிங் மட்டுமே அந்த அணிக்கு கொடுக்கப்படும். அதற்கு அடுத்த முறை அதே வீரரோ அல்லது வேறு யாரோ இதே செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்பது விதியாகும். அந்த வகையில் நேற்று ஜடேஜா ஆடுகளத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் ஓடியபோது வார்னிங் கொடுக்கப்பட்டது. தற்போது அஸ்வினும் அதே செயலில் ஈடுபட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ